சென்னையில் பெண்கள் பாதுகாப்பு மையம்!

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து காக்க, தமிழகத்தில் முதல்முறையாகச் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு மையம் இன்று (ஆகஸ்ட் 3) திறக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலைய வளாகத்தில் பெண்களுக்கான குடும்ப ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் உள்ளிட்ட புகார்கள் இங்கு விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிபிசிஐடி ஏடிஜிபி அம்ரீஷ் புஜாரி, காவல் துறை கூடுதல் ஆணையர் சாரங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஏ.கே.விஸ்வநாநன், "பெண்களுக்கான மகளிர் குடும்ப ஆலோசனை மையம் முதலில் இந்த இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எந்தவிதமான பிரச்சினை என்றாலும், அவர்கள் இங்கு அணுகலாம்.

இங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முழுமையான ஆலோசனை வழங்கப்படும். எளிதில் பிரச்சினைகளைக் கையாள, அவர்களுக்கு இங்குள்ள அதிகாரிகள் உதவுவார்கள். பெண் காவல் அதிகாரிகளுக்கும், இந்தப் பயிற்சியை வழங்கும் திட்டமுள்ளது" என்று கூறினார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன். "பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியான முறையில் ஆலோசனை வழங்க, முதல்முறையாகக் காவல் துறை அலுவலகத்தில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்கள் இந்த மையத்தில் ஆலோசகர்கள் இருப்பார்கள். மற்ற நாட்களில், அவர்கள் களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த ஆலோசகர்கள் மும்பையில் பயிற்சி பெற்றுள்ளனர்" என்று தெரிவித்தார்.

தேசிய மகளிர் ஆணையமும், தமிழகக் காவல்துறையும் இணைந்து செயல்படுத்தும் இந்தப் பெண்கள் பாதுகாப்பு மையத்தை 94983 - 36002 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த மையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள், உளவியல் ஆலோசகர்கள், மகளிர் காவல் துறை அதிகாரிகள் அங்கம் வகிப்பார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.