பியார் பிரேமா காதல்: முந்தியதா? பின்வாங்கியதா?

ரைஸா, ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ரைஸாவும் ஹரிஷ் கல்யாணும். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இதன் மூலம் திரைப்படத்துறையில் வாய்ப்புகளைப் பெறுவார்கள் என கமல் யூகித்திருந்தாலும் தனக்கே போட்டியாக வருவார்கள் என நினைத்திருக்க வாய்ப்பில்லை. ரைஸா - ஹரிஷ் கல்யாண் ஜோடி முதன்முறையாகக் களம் காண்பதே தங்களது பிக் பாஸ் கமலை எதிர்த்துத் தான். கமல் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் 2 வெளியாகும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியே இவர்களது பியார் பிரேமா காதல் திரைப்படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. முன் பதிவுகளும் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆனால் தற்போது படக்குழு ஒரு நாள் முன்கூட்டியே களமிறங்க முடிவெடுத்துள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு பதிலாக ஒரு நாள் முன்னர் 9ஆம் தேதி வியாழக்கிழமையே படத்தை வெளியிடவுள்ளனர். இந்த தகவலை ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அறிமுக நடிகர்களின் படங்களுக்கு பெரும்பாலும் படம் பார்த்த ரசிகர்களின் வாய்மொழித் தகவல்கள் மூலமே திரையரங்கிற்கு தொடர்ந்து பார்வையாளர்கள் வருவர். எனவே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள விஸ்வரூபம் 2 படத்தோடு அல்லாமல் ஒரு நாள் முன்னதாக இறங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட் 3ஆம் தேதி இன்று பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் களமிறங்கியுள்ளன. இதில் கஜினி காந்த் திரைப்படம் மட்டுமே முன்னணி நடிகர் நடித்த படமாக உள்ளது. ஆர்யா, சாயிஷா இணைந்து இதில் நடித்துள்ளனர். இதில் முதல் வாரத்தை நிறைவு செய்யாத படங்களின் தியேட்டர்கள் 9ஆம் தேதி வெளியாகும் பியார் பிரேமா காதலுக்கு எளிதாகக் கிடைக்கப்பெறும்.

பிரபு தேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள லக்‌ஷ்மி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24 ஆம் தேதி படத்தை வெளியிடத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் படக்குழு விண்ணப்பித்திருந்த நிலையில் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அதை உறுதிசெய்துள்ளது. 

No comments

Powered by Blogger.