முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்!

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித் தொழில் தொடர்வதினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என மீனவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இன்று பிற்பகல் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, புதுமாத்தளன் தொடக்கம் கொக்குத்தொடுவாய் வரையான கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் தொடர்வதுடன் சுருக்கு வலை தொழிலும் அதிகரித்துள்ளது.

சுருக்கு வலைத் தொழிலை தடை செய்யும்படி கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் அவர்கள் தடை செய்யவில்லை.


அத்துடன், சட்டவிரோத கடற்தொழிலும் அண்மை நாட்களாக அதிகரித்துள்ளது. இதனால் கரைவலை மீன்பிடித் தொழிலாளர் உள்ளிட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி தொழில் செய்பவர்களை கடற்படையினருடன் இணைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



முல்லைத்தீவு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையினை பயன்படுத்துபவர்களது அனுமதியினை ரத்து செய்வது தொடர்பில் கடந்த 24ஆம் திகதி மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரி உறுதி அளித்திருந்தார்.

எனினும், இந்த வாக்குறுதியை கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பின் தலைவர் ஜெயா சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.