வருவாயைக் குறைக்கும் வரிக் குறைப்பு!

ஜிஎஸ்டியின் கீழ் பல்வேறு பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் அரசின் வரி வருவாயில் அடுத்த நான்கு மாதங்களுக்குப் பாதிப்பு இருக்கும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஜூலை 21ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட 88 பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டன. வரிகள் குறைக்கப்படும்போது மாநில அரசுகளின் வரி வருவாயும் குறையும். இச்சுமையைக் குறைக்க மாநில அரசுகளுக்கு உண்டான இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்கும். இந்த வரிக் குறைப்பால் அடுத்த மூன்று, நான்கு மாதங்களுக்கு வரி வருவாய் குறையும் என்று ஜிஎஸ்டி அமலாக்கக் குழுவின் தலைவரான சுஷில் மோடி தெரிவித்துள்ளார். இவர் பீகார் மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ளார்.

ஜூலை 2ஆம் தேதி கொல்கத்தாவின் பட்டயக் கணக்காளர்கள் பல்கலைக் கழகத்தில் (ICAI) நடந்த ஜிஎஸ்டி கருத்தரங்கில் சுஷில் மோடி பேசுகையில், “ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.96,483 கோடியாக இருந்தது. இந்த அளவை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், 12% மற்றும் 18% ஆகிய இரண்டு விகிதங்களையும் ஒன்றிணைந்து 14% அல்லது 15% வரி வரம்பாக நிர்ணயிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 28 சதவிகித வரி வரம்பில் உள்ள பொருட்களின் வரிகளும் விரைவில் குறைக்கப்படும்; ஆனால் அப்பொருட்களுக்கு மாநில அரசுகள் செஸ் வரிகளை விதிக்கும். அதேபோல, பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவது அவற்றின் வருவாயைச் சார்ந்தே முடிவெடுக்கப்படும்.

இந்தியா போன்றதொரு நாட்டுக்கு ஒற்றை வரி விதிப்பு முறை சாத்தியமில்லை. கடைசி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டன. இதனால் அடுத்த மூன்று, நான்கு மாதங்களுக்கு அரசின் வரி வருவாய் பாதிக்கப்படும். இந்த இழப்பு ரூ.70,000 கோடி வரையில் இருக்கும்” என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.