வரலட்சுமியின் ’கன்னி ராசி’!

விமல்-வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள கன்னி ராசி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் (ஆகஸ்ட் 3) வெளியாகியுள்ளது.

சமீபத்தில்தான் கூட்டுக் குடும்பப் பின்னணியின் அவசியத்தை வலியுறுத்தி கடைக்குட்டி சிங்கம் வெளிவந்து வெற்றிப் படங்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது. அதே பாணியில் அறிமுக இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ளத் திரைப்படம் கன்னி ராசி. விமல், வரலட்சுமி சரத்குமாருடன், ரோபோ சங்கர், யோகிபாபு, பாண்டியராஜன், காளி வெங்கட் என இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் களமும் கிராமம்தானாம்.

ஷமீம் இப்ராஹிம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின், படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டார பகுதியில் 47 நாட்கள் நடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலா மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். இரு கோடுகள், அவ்வை சண்முகி படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தோட கொலு பாட்டும் ரசிகர்கள் மனதில் நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்கும் வகையில் எடுத்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர்- யுகபாரதி காம்பினேஷனில் கிராமத்து மண் மணக்கும் வகையில் பாடல்கள் உருவாகியுள்ளது. கிராமத்துப் பாடல்கள் என்பதால் எழுதியபின்தான் மெட்டு போட்டுள்ளனர். படத்தின் க்ளைமேக்ஸ் கல்யாண மண்டத்தில் நடப்பது போல் அமைந்திருக்கிறது. இருபத்தாறு நடிகர்களும் பங்கு பெற்றுக் கலகலப்பாக அந்தக் காட்சி வந்திருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை வரலட்சுமி பகிர்ந்து, “முழுக்க முழுக்க எண்டர்டைனர் பூர்த்தி செய்யும் கன்னி ராசி. இதில் நானும் ஓர் அங்கமாக இருந்தது மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.