கருணாநிதியை நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர்!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 8 நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 5) வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. பிற்பகல் 2 மணியளவில் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் காவேரி மருத்துவமனைக்கு ராம்நாத் கோவிந்த் வந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் இருந்தனர். ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நலன் குறித்து ராம்நாத் கோவிந்த் கேட்டார். பின்னர் அங்கிருந்து விமான நிலையத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர் விமானம் மூலம் கேரளா சென்றார்.

கருணாநிதியை சந்தித்தது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று குடியரசுத் தலைவர் பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவர் விசாரிப்பது போன்ற புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

#india #karunanithi  #istalin  #kanimoli  #Tamil_news  #indian_news

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.