யாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு

பட்டப்பகல் வேளையில் வீட்டில் யாருமில்லாத வேளையில் வீட்டின் கூரை ஓட்டை உடைத்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(21) யாழ்.குப்பிளான் வடக்குப் பகுதியிலுள்ள வலி.தெற்குப் பிரதேச சபையின் ஐக்கியதேசியக் கட்சியின் பெண் உறுப்பினரொருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வலி.தெற்குப் பிரதேச சபையின் பெண் உறுப்பினரின் கணவரான சி.கணேசகுமார் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,

எனது பிள்ளைகளை உறவினர்களின் வீட்டில் விட்டுவிட்டு பகல்-11 மணிக்கு யாழ்.நகரில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக எனது மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றேன்.

இந்தநிலையில் பிற்பகல்-01 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வருகை தந்து கேற்றைத் திறந்து பார்த்த போது வீடு உடைத்துத் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 55 ஆயிரம் ரூபா பணம், பெறுமதியான புதிய கைத்தொலைபேசி, இரண்டு கைக்கடிகாரம், பத்தாயிரம் ரூபா பெறுமதியான கவரிங் நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

வீட்டிற்கு அருகில் குடியிருப்புக்கள் பல காணப்படும் நிலையில் வழமையாக நாங்கள் வெளியே சென்று வருவது வழமை. ஆனால், இன்றுதான் எதிர்பாராத விதமாக இவ்வாறான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. வீடு முழுவதும் சல்லடையிடப்பட்டுத் தேடுதல் நடந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன என்றார்.

சந்தேகநபரின் நடமாட்டம்
இன்று குப்பிளான் வடக்குப் பகுதியில் திருட்டுப் போன வீட்டுக்கு அருகில் குறிப்பிட்ட நேரத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் 16 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவரின் நடமாட்டம் காணப்பட்டமையைத் தாம் அவதானித்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நபர் சிவப்பு ரீசேர்ட் அணிந்திருந்ததாகவும், யாருடனோ கைத்தொலைபேசியில் உரையாடியவாறு நின்றிருந்ததாகவும் தெரிவித்தனர்.

திட்டமிடப்பட்ட திருட்டா?

குறித்த திருட்டுச் சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் இடம்பெற்றிருக்கலாம் எனவே கருத வேண்டியுள்ளது. நான் நேரடியாக அவதானித்த விடயங்களும், எனக்குக் கிடைத்த தகவல்களும் இதனையே உறுதி செய்கின்றன.

மக்கள் கடும் அதிர்ச்சி

குடியிருப்புக்கள் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகல் வேளையில் வீடுடைத்துத் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பிளான் வடக்கில் அண்மைக் காலங்களில் வீடுடைத்துத் திருடப்பட்ட முதல் சம்பவமாக குறித்த சம்பவத்தைக் கொள்ள முடியும்.

இதேவேளை, குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சுன்னாகம் பொலிஸார் இன்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு நேரடியாக வருகை தந்து விசாரணைகள் மேற்கொண்டனர்.

No comments

Powered by Blogger.