மணிவண்ணனுக்கு இடைக்காலத் தடையாம்??

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

யாழ் மாநகர சபைக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது மாநகர சபை எல்லையில் வதிவிடம் கொண்டிருந்ததாக எதிர் மனுதாரரான யாழ் மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி, ஆட்சேபனையை முன்வைத்தார்.

எனினும் 2017ஆம் ஆண்டு வாக்காளர் பதிவின் போது, உறுப்பினர் மணிவண்ணன் யாழ் மாநகர சபை எல்லையில் வதியவில்லை என மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்தார்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் அடங்கிய அமர்வு, மனுதாரரால் கோரப்பட்ட இடைக்கால நிவாரணமான இந்த வழக்கு தீர்ப்பளிக்கப்படும் வரை மணிவண்ணன் சபை அமர்விலோ, வாக்களிப்பிலோ பங்கேற்பதற்க முடியாது என இடைக்காலத் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

யாழ் மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டமையானது, உள்ளூராட்சி மன்ற தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ் மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.

இதேவேளை, மற்றொரு மனு ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் கே.வி.குகேந்திரனுக்கு (ஜெகன்) எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இரட்டைக் குடியுரிமை பெற்ற குகேந்திரன், யாழ் மாநகர சபை உறுப்பினராக இருக்க முடியாது என கட்டளையிட கோரி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவின் ஆரம்ப விசாரணையிலேயே மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.