நீரவ் மோடியை நாடு கடத்தக் கோரிக்கை!

இங்கிலாந்தில் தலைமறைவாகியுள்ள நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு அரசுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டே தப்பியோடிவிட்டார். நீரவ் மோடிக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளருமான மெஹுல் சோக்சியும் தலைமறைவாகிவிட்டார். போலியான ஆவணங்களைப் பஞ்சாப் வங்கியில் கொடுத்து வெளிநாடுகளில் அதிகளவில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் நீரவ் மோடி, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரைக் கைது செய்ய, சர்வதேச காவல் ஏஜென்சியான ’இண்டர்போல்’ அமைப்பிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி பாராளுமன்றத்தில் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகம் அளித்துள்ள தகவலில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீரவ் மோடி இங்கிலாந்தில்தான் இருக்கிறார் என்பதை உறுதிசெய்ததற்கான எந்தவொரு ஆதாரத்தையும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகம் குறிப்பிடவில்லை. இந்திய வங்கி வரலாற்றில் மிகப்பெரிய மோசடியாக அறியப்படும் இந்த மோசடி வழக்கில் நீரவ் மோடியும், மெஹுல் சோக்சியும் குற்றத்தை மறுக்கின்றனர். ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் சார்பாக அவர்களது வழக்கறிஞர்களைத் தொடர்புகொள்ள மேற்கண்ட முயற்சி தோல்வியடைந்ததாக அந்நிறுவனம் கூறுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.