நிர்மலா தேவிக்குக் காவல் நீட்டிப்பு!

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, அக்கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக வாட்ஸ்அப்பில் பேசிய உரையாடல் கடந்த மார்ச் மாதம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அதன்பின் பேராசிரியை நிர்மலா தேவியைக் கல்லூரி நிர்வாகம் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (ஆகஸ்ட் 2) முடிவடைந்தது. இதனையடுத்து, மூன்று பேரும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மூவருக்கும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.