மாறிய ஸ்டாலின், காத்திருக்கும் அழகிரி!

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் கோபாலபுரம் காட்டியது.

“திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்குப் பிறகு கோபாலபுரத்துக்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று காலை சுமார் 9 மணி அளவிலேயே கோபாலபுரத்துக்கு வந்துவிட்டனர். ஆ.ராசா, ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, துரைமுருகன் என முக்கிய நிர்வாகிகள் பலரும் வீட்டுக்கு வந்திருந்தனர்.

வீட்டு வாசலில் காத்திருந்த திமுக தொண்டர்கள் வரிசையாக வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருமே ஸ்டாலினிடம் கை கொடுக்க... பதிலுக்கு ஸ்டாலினும் கை கொடுத்து, ‘எந்த ஊருல இருந்து வர்றீங்க... உங்க பேரு என்ன?’ என விசாரித்தார்.

வயதான பெரியவர் ஒருவர் வந்தார். ‘அப்பா போய்ட்டாரு தம்பி... அவரு இல்லாம இங்கே இருப்பதே நான் வேதனையா நினைக்கிறேன்...’ என்று வாய்விட்டுக் கதறி அழுதார். அவரை தேற்றி சமாதானம் சொல்லி அனுப்பினார் ஸ்டாலின். அதே நேரம் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் அலறியது. போனை எடுத்தவர், ‘சொல்லுங்க... ஸ்டாலின் தான் பேசுறேன். அப்படியா... நன்றி. இங்கே கொஞ்சம் கூட்டம் அதிகமா இருக்கு. அரை மணி நேரம் கழிச்சுப் பேசுங்க...’ என்று சொல்லிவிட்டுப் போனை கட் செய்தார்.

அதே நேரம் வீட்டில் அமர்ந்திருந்த நிர்வாகிகளில் ஒருவர், ‘மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்த சமயத்துல தளபதிகிட்ட சொன்ன விஷயம் நினைவிருக்கா... எப்பவும் செல்போனை மட்டுமே பார்த்துட்டு கார்ல போய்ட்டு இருக்காதீங்க. கொஞ்சம் மக்களையும் நிமிர்ந்து பாருங்க...’என்று அவருகிட்ட நேரடியாகவே சொன்னாங்க. அதை இப்போ தளபதி கேட்க ஆரம்பிச்சுட்டாரு. சொல்லப்போனா முன்பெல்லாம் போன் பண்ணினால் எடுக்கவே மாட்டாரு. இப்போதெல்லாம் உடனே எடுத்து பதில் சொல்றாரு. இப்போ நிர்வாகிகளை வரிசையாக வீட்டில் சந்திப்பதே புதிய விஷயம்தானே... இதைத்தானே அவங்க எதிர்பார்க்கிறாங்க...’ என பேசிக் கொண்டிருந்தார்.

‘எத்தனையோ முறை நானே பார்க்க வந்துட்டு பார்க்காமல் திரும்பிப் போயிருக்கேன். அப்புறம் எப்படி சாதாரண தொண்டன் பார்க்க முடியும்? தலைவர் மறைவுக்குப் பிறகு தளபதிகிட்ட பல அதிசயங்களை பார்க்க முடியுது..’ என்று அதற்கு பதில் சொன்னார் சேலத்தில் இருந்து வந்த நிர்வாகி ஒருவர்.

இன்னொரு பக்கம் ஸ்டாலினை சந்திக்க வரும் நிர்வாகிகள் எல்லோரும் அவரிடம் சொல்லும் விஷயம், ‘தைரியமா இருங்கண்ணே... மாற்றம் வரும். அடுத்து நம்ம ஆட்சிதான்’ என்பதாகவே இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் ஸ்டாலின் பதில் சொல்லாமல், தலையாட்டியபடியே அனுப்பி வைக்கிறார்.

அதேபோல முன்பு கலைஞரிடம் மனு கொடுக்க யார் வந்தாலும், மனுவை வாங்கியதும் சண்முநாதனிடம் தான் கொடுப்பார். இன்றும் அப்படி சிலர் கையில் மனுக்களுடன் வந்தனர். அதை வாங்கிய ஸ்டாலின், ‘உள்ளே கொடுத்துடுங்க..’ என கை நீட்டிக் கட்டினார். அவர் கைநீட்டிய இடத்தில் இருந்தது சண்முகநாதன் அறை. கலைஞர் மறைவுக்குப் பிறகும் கூட அவரது செயலாளர்களான சண்முகநாதனும், ராஜமணிக்கமும் வழக்கம் போல கோபாலபுரத்துக்கு வந்துவிடுகிறார்கள். ஸ்டாலினுக்காக தயாராகும் அறிக்கையில் சில திருத்தங்களை செய்து தருகிறார் சண்முகநாதன். ‘அவங்க ரெண்டு பேரும் அதே அறையில் இருக்கட்டும். அவங்களை எதுவும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்...’ என சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். அதனால், சண்முகநாதனும், ராஜமாணிக்கமும் கலங்கிய கண்களுடன் தினமும் கோபாலபுரத்துக்கு வழக்கம் போல வந்து போகிறார்கள்.

துர்கா ஸ்டாலினும் கோபாலபுரம் வீட்டில்தான் இருக்கிறார். தயாளு அம்மாளுடன் அமர்ந்து துர்கா அதிக நேரம் பேசுகிறாராம். ‘அவரு போய்ட்டாரா... போய்ட்டாரா..? வந்துடுவாருன்னு நினைச்சேன்..’ என்று சொல்லி புலம்பி அழுதபடியே இருக்கிறாராம் தயாளு அம்மாள். இப்படியாக கோபாலபுரத்து நாட்கள் நகர்கிறது” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றை தட்டியது வாட்ஸ் அப். “திருவாரூர் தொகுதியில் அழகிரியை போட்டியிடச் சொல்லி சிலர் சொல்லி வருகிறார்களாம். அப்பா இடத்தில் நீங்கதான் இருக்கணும் என்று அவரிடம் சொன்ன போது, ‘ அப்பாவின் காரியம் முடியுற வரை அரசியல் எதுவும் பேச வேண்டாம்னு பார்க்குறேன். எலெக்‌ஷன்ல நிற்கணும்னு முடிவு பண்ணிட்டா அதுக்கு எதுக்கு திருவாரூர் போகணும்? திருப்பரங்குன்றம் தொகுதி காலியாகத்தானே இருக்கு. அங்கேயே நான் நிற்பேனே. அதெல்லாம் இப்போ பேச வேண்டாம்’ என்று சொல்லி வருகிறாராம். அழகிரியின் திருப்பரங்குன்றம் கனவை ஸ்டாலினிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவர் பதில் எதுவும் சொல்லவில்லையாம்.”என்று முடிந்தது மெசேஜ். வாட்ஸ் அப் ஆஃப்லைனில் போயிருந்தது.

No comments

Powered by Blogger.