லார்ட்ஸில் ‘களமிறங்கிய’ சச்சின் மகன்!

சச்சின் மகன் செய்த செயலுக்கு லார்ட்ஸ் மைதான நிர்வாகம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இங்கிலாந்தில் உள்ள எம்சிசிக்குப் பயிற்சி பெறச் சென்றிருக்கிறார்.
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்துவருகிறது. இந்தப் போட்டி மழை காரணமாக நேற்று (ஆகஸ்ட் 10) அவ்வப்போது தடைபட்டது. போட்டி நடந்துகொண்டிருக்கும்போது மழை வந்தால், உடனடியாக ஆடுகளத்தை மூடும் வேலையில் மைதான உதவியாளர்கள் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் அவர்களுடன் இணைந்து அர்ஜுனும் மைதானப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டார். இந்தச் செயலால் அர்ஜுனைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையடுத்து லார்ட்ஸ் மைதான நிர்வாகமும் அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளது. ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அந்நிர்வாகம், “அர்ஜுன், இங்குள்ள எம்சிசி இளம் கிரிக்கெட் வீரர்களுடன் பயிற்சி பெற மட்டும் வரவில்லை. எங்கள் ஆடுகள நிர்வாகிகளுக்கு உதவியும் புரிந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளது.
Powered by Blogger.