மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதா!

முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நிறைவேறாமலேயே இந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது.
‘முத்தலாக்’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்பு மசோதா’வை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த மசோதாவின்படி, ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும். விவாகரத்துஎன்பது சிவில் பிரிவில் வருகிறது என்றும், அதனை கிரிமினல் குற்றத்தில் ஏன் கொண்டுவர வேண்டும் என்றும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல, கணவர் 3 ஆண்டுகள் சிறைக்குச் செல்லும் பட்சத்தில் மனைவி மற்றும் குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி விடும் என்றும் பலர் விமர்சித்தனர். பாஜக தனது வகுப்புவாதக் கொள்கையை திணிக்க முயற்சிப்பதாக, இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. ஆனால், அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடத்த வற்புறுத்தவில்லை. கடும் அமளி ஏற்பட்டபோதும், எதிர்க்கட்சிகளின் திருத்தங்களைப் புறக்கணித்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் பாஜக அரசுக்கு அதிக எம்பிக்கள் இருப்பதால் எதிர்க்கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட அரசு தீவிரம் காட்டியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, நடைபெற்று வந்த மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கலாகவில்லை.
மத்திய அமைச்சரவை முத்தலாக் மசோதாவில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு ஆகஸ்ட்9ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது. தாக்கல் செய்யப்பட்டிருந்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று, நேற்று (ஆகஸ்ட்10) காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. மாநிலங்களவையில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதில் சிக்கல்கள் இருந்தசூழலில், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த மசோதாவை தாக்கல் செய்யப்படாது என்று அறிவித்தார். முத்தலாக் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரும் புதிய மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், முத்தலாக் மசோதா இனி டிசம்பர் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.