தமிழக அரசுக்கு ஆபத்து!

தமிழகம் பயங்கரவாதிகளின் கையில் போய்க்கொண்டிருக்கிறது என்றும், பிரிவினைவாதிகளைப் போல் பேசுபவர்களைத் தமிழக அரசு கண்காணிக்கத் தவறிவிட்டது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த மே மாதம் 27ஆம் தேதி குற்றம் சாட்டினார். அன்றிலிருந்து அவ்வப்போது இந்த குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மீது பொன்.ராதாகிருஷ்ணன் வைத்துவருகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினத்தந்தி நாளிதழுக்கு இன்று (ஆகஸ்டு 13) சிறப்புப் பேட்டியளித்த பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்தை உறுதிசெய்துள்ளார்.

பிரதமரின் பேட்டியில், ”உலகம் முழுவதும் பயங்கரவாத இயக்கங்கள் மனித குல மேம்பாட்டையும், வளர்ச்சியையும், நலனையும் அச்சுறுத்திக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமது நாட்டில்கூட மாநிலங்களுக்குத் தேவையான பல வளர்ச்சித் திட்டங்கள், மாநிலம் வளம்பெறுவதற்கான திட்டங்கள் செயலுக்கு கொண்டுவரப்பட சில குறிப்பிட்ட நோக்கம் கொண்டவர்களால் இடையூறு செய்யப்படுகின்றன என்பதை சமீபத்தில் நடந்த பல சம்பவங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

இதில் பயங்கரவாத சக்திகளுக்கு தொடர்பு இருப்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. இதை நான் அல்ல, எனக்கு முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கே சில வெளிநாட்டுத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களை தூண்டிவிடுகிறது என்று சரியாகக் கூறியிருக்கிறார். மக்கள் பலனடையும் நல்ல திட்டங்கள் பற்றி வேண்டுமென்றே அப்பாவி மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும் முயற்சியில் இந்த பயங்கரவாத சக்திகளின் தலையீடு இருப்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. இவ்வாறு தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பிரதமரே உறுதிப்படுத்தி பேட்டி அளித்துப் பல மணிநேரம் ஆன பின்னரும் இன்று மாலை வரை தமிழக அரசிடமிருந்தோ, தமிழக முதல்வரிடமிருந்தோ இதுவரைக்கும் பதில் வரவில்லை.கோட்டை வட்டாரங்களில் இதுகுறித்து நாம் விசாரிக்கையில், “இது மிக மிக சீரியசான விவகாரம். பிரதமர் முன் வைத்தது அரசியல் ரீதியான விமர்சனமோ, கருத்தோ அல்ல. அதையும் தாண்டி நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயம். இப்படிப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் இதற்கு உடனடியாக பதில் சொல்லியிருக்க வேண்டும். இந்நேரம் முதல்வர் பதவியில் கலைஞரோ, ஜெயலலிதாவோ இருந்திருந்தால் பிரதமர் இதுபோல ஒரு கருத்தை சொல்லியிருக்க முடியுமா? ஆனால் இங்கிருக்கும் அரசு வலுவற்ற அரசு என்ற முடிவுக்கு பிரதமர் வந்துவிட்டதாகவே இதைக் கருத வேண்டியுள்ளது’’ என்கிறார்கள்.

பிரதமரின் இந்த பேட்டிக்கு இன்னொரு முக்கியமான பின்னணி இருப்பதாக உயர் அதிகாரிகள் வட்டாரங்களில் பலமான பேச்சு எழுந்திருக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினரைக் குறிவைத்து ஜுலை 16ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டர் செய்யாதுரை அவரது மகன் நாகராஜ், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர் 183 கோடி ரூபாய் ரொக்கம், 105 கிலோ தங்க கட்டிகள், 2 கிலோ நகைகளைக் கைப்பற்றினார்கள். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 450 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதைக் கண்டுபிடித்த வருமான வரித்துறையினர் இதன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த போதுதான் கலைஞரின் உடல் நலம் பற்றிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இதுகுறித்து எடப்பாடி குடும்பத்தைக் காப்பாற்றிய கலைஞர் என்ற தலைப்பில் மின்னம்பலம் மொபைல் பத்திரிக்கையில் செய்தி வெளியானது.

அச்செய்தியில், ”தமிழகத்தில் நடந்த மெகா ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது, செய்யாதுரை, நாகராஜனை இயக்குவது யார் என்பதையெல்லாம் ஆதாரங்களோடு கண்டுபிடித்துவிட்டனர் வருமான வரித்துறை அதிகாரிகள். செய்யாதுரைக்குப் பின்னால் இருப்பது முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன் என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்துவிட்டனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரோடு பார்டனர் ஷிப்பில் முதல்வர் எடப்பாடியின் மகன் தொழில் செய்வது பற்றியும், அந்தத் தொழிலுக்கான முதலீட்டு முகாந்திரங்கள் பற்றியும் ஆவணங்களை கைப்பற்றிவிட்டனர். மேலும் வளைகுடா நாடுகளில் தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமானவர்களோடு இணைந்து எடப்பாடியின் மகன் தொழில் செய்து வருவதற்குரிய ஆதாரங்களையும் சேகரித்துவிட்டனர். வெளிநாடுகளில் தொழில் செய்து அதன் மூலம் முறைகேடாக வருமானம் ஈட்டுவதெல்லாம் அமலாக்கத்துறையின் கீழ் வரும். இது தொடர்பாக வருமான வரித்துறை அமலாக்கத் துறைக்கும் தகவல்கொடுத்து இரு துறைகளும் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருந்தன. ஆனால் அப்போது முன்னாள் முதல்வரும் முக்கியத் தலைவருமான கலைஞரின் உடல் நிலை இவ்வாறு இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரு அரசியல் குழப்பம் வேண்டாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இப்போது தமிழகத்தில் ஒர் அரசின் இருப்பு முக்கியம் என்று மத்திய அரசு கருதுகிறது. அதனால்தான் முதல்வரின் குடும்பத்தின் மீதான அடுத்த கட்ட நடவடிக்கையை தள்ளிவைக்குமாறு வருமான வரித்துறைக்கும், அமலாக்கத் துறைக்கும் உத்தரவு போயிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அடுத்த கட்ட நடவடிக்கை வெடிக்கும் ’’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

அந்த தருணம் இப்போது வந்துவிட்டதாக மத்திய அரசு கருதுகிறது. அதற்கான அச்சாரம்தான் தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளதாகவும், அதற்கு சான்றுகளும் இருப்பதாகவும் பிரதமரே வெளிப்படையாக அளித்த பேட்டி. இந்தக் குற்றச்சாட்டுக்காக பிரதமர் நடவடிக்கையில் இறங்கினால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்கிறார்கள் அதிகார வட்டாரங்களில்.


#india   #tamilnadu   #eddapadi   #modi  #india_Goverment

No comments

Powered by Blogger.