யாழ்.உரும்பிராயில் வீதிக்கு கிடைத்த விடுதலை??

யாழ். உரும்பிராய் வடக்கில் உள்ள ஞானவைரவர் கோயிலை ஊடறுத்துச் செல்லும் வீதி மீளவும் மக்கள் போக்குவரத்திற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவ் வீதி மேலும் விஸ்தரிக்கப்பட்டுமுள்ளது.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் வட்டார உறுப்பினர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக நீண்டகாலமாக இரு தரப்புக்களிடையே நிலவிவந்த முரண்பாடுகள் சுமூகமாகத் தீர்க்கப்பட்டுப் புரிந்துணர்வின் அடிப்படையில் குறித்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புரிந்துணர்வில் சில இடைவெளிகள் ஏற்பட்டமையின் காரணமாக உரும்பிராய் வடக்கில் ஞானவைரவர் கோயிலை அண்மித்துச் செல்லும் வீதியின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த வீதியைத் திறக்க வேண்டுமென்ற மக்களின் விருப்புக்கு இணங்க தற்போது பிரதேச வாசியான க.திருச்செல்வம் என்பவர் தனது காணியூடாக போக்குவரத்துக்கான நிலத்தினை வழங்கினார்.

குறித்த வீதி கடந்த காலத்தில் மிகவும் ஒடுக்கமாகக் காணப்பட்டலும் இவ் வீதியினூடாக உரும்பிராய் வடக்கிலிருந்து மானிப்பாய் கைதடி பிரதான வீதியை மக்கள் அடையக்கூடியதாகவும், உரும்பிராய் மேற்கின் பகுதிகளை அடையக் கூடிய குறுக்குப் பாதையாகவும் காணப்பட்டது.

இந் நிலையில் இவ் வீதியின் தேவை கருதி பல காணி உரிமையாளர்கள் தம் காணிகளை விட்டுக்கொடுத்திருந்தனர். எனினும் சில இடங்களில் காணி விட்டுக்கொடுப்புக்கள் நடைபெறவில்லை. இதனால்,பாதை இடைநடுவே தடைசெய்யப்பட்டுக் காணப்பட்டது.

இந்த நீலையில் குறித்த பகுதியிலுள்ள காணி உரிமையாளர்களுடன் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் உரும்பிராய் மேற்கு வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் சிவகுமார் அகீபன், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பேச்சு நடாத்தியதன் பயனாகப் பொது உடன்பாடு எட்டப்பட்டு இப்பாதை விஸ்தரிக்கப்பட்ட பாதையாகத் அனைத்துத் தரப்புக்களின் நல்லிணக்கத்துடனும் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்தப் பாதை திறக்கப்பட்டதனைத் தொடர்ந்து பாதையைத் திறந்துவைப்பதற்கு ஒத்துழைத்த அனைத்துத் தரப்புக்களும், காணியினை உவகையுடன் அன்பளித்த காணி உரிமையாளர்களும் இணைந்து உரும்பிராய் வடக்கு ஞானவைரவர் ஆலயத்தில் வழிபாடுகளை நடாத்தினர்.

இதேவேளை, எதிர்வரும் காலத்தில் இவ் வீதி வர்த்தமானி அறிவித்தல் வாயிலாகப் பதிவுசெய்யப்படவுள்ளதுடன் விரைவில் தார் வீதியாக மாற்றியமைப்பதற்கு முயற்சிப்பதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.No comments

Powered by Blogger.