போலீசாருடன் வாக்குவாதம்: வளர்மதி கைது!

சென்னையில் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கல்லூரி மாணவியும் சமூகச் செயற்பாட்டாளருமான வளர்மதி நேற்று (ஆகஸ்ட் 23) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து, மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்குப் பல்வேறு தரப்பில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவிடும் வகையில், மாணவி வளர்மதி நேற்று சென்னை சென்ட்ரல் பகுதியில் நிதி திரட்டினார். அப்போது, காவலர் ஒருவர் வளர்மதியைப் புகைப்படம் எடுத்தாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வளர்மதி காவலரிடம் விளக்கம் கேட்டதாகவும், இதனால் அந்தக் காவலருக்கும் வளர்மதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பெரியமேடு காவல் துறையினர் வளர்மதியைக் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்த வளர்மதி, தமிழ்நாடு பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்ட பொறுப்பாளரும், இயற்கைப் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமாகப் பொறுப்பு வகித்து வருகிறார். எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராகப் போராடிய வளர்மதி மீது, தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு நெடுவாசல் - ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபட்ட காரணத்திற்காக, வளர்மதி மீது கடந்த வருடம் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.