ஐ.நாவில் தமிழ் அமைப்புகளுக்கு சவாலாவோம்??

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 39ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. புலம் பெயர் தமிழ் அமைப்புகளுக்கு நாம்

பெரும் சவாலாக அமைவோம். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கு இங்கிலாந்திலுள்ள போர் விவகாரங்களுடன் தொடர்புபட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம்.

இவ்வாறு உலகளாவிய தேசப்பற்றுள்ள இலங்கையர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அந்த ஒன்றியம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவர் வசந் கீர்த்திரத்ன அதில் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 38ஆவது அமர்வில் கலந்து கொண்டிருந்தோம். எமது நாட்டுக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எந்தளவு கெடுபிடிகளை மேற்கொண்டிருந்தார்கள் என்பதை அவதானிக்க முடிந்தது.

மனித உரிமைகள் சபை அமர்வில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்புகள் இராணுவத்துக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.

நாட்டிலுள்ள சகல மக்களும் நாட்டின் இறைமையையும் நாட்டையும் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மாறாக நாட்டையும் பாதுகாப்புத் தரப்பினரையும் காட்டிக்கொடுக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை நிரூபிப்பதற்கு இங்கிலாந்திலுள்ள போர் விவகாரங்களுடன் தொடர்புபட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம். கடந்த அமர்வுகளின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 130 பேரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவர்களை விடுதலை செய்யக்கூடாதென நாம் கோரிக்கை முன்வைத்தோம். அந்த உறுப்பினர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இலங்கைக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிலுள்ள பலருக்கும் இலங்கைக்குமிடையில் எவ்வித  தொடர்புமில்லை. தமிழ்நாட்டிலிருந்து வரும் சிலர் இலங்கைக்கு எதிரான பலமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் – என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.