டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் ‘டெக்னிக்கல்’ அவதாரம்!

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “நீர் மேலாண்மை தொடர்பான விஷயங்களில் அரசின் செயல்பாடு மெத்தனமாக இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபடியே இருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர் ஒருவரைச் சென்னைக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார் முதல்வர். அவர் சில ஐடியாக்களை முதல்வரிடம் சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் கவனமாக முதல்வர் கேட்டுக்கொண்டாராம். ‘நீங்க சொன்ன விஷயங்களை நான் உடனே செயல்படுத்தப் பார்க்கிறேன்...’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் முதல்வர்.
அதன் பிறகுதான், நேற்று நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடப் போன சமயத்தில், ‘காவிரியின் குறுக்கே 62 தடுப்பணைகள் கட்டப்படும். அப்படிச் செய்தால்தான் தண்ணீர் வீணாவதையும் தடுக்கலாம். வாய்க்கால் பாசனத்துக்கும் தண்ணீரைப் பயன்படுத்த முடியும்..’ என்றெல்லாம் டெக்னிக்கலாகப் பேசினார். எல்லாம் கோவைக்காரர் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போன பாயிண்ட்ஸ்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்படித் திடீரென, தடுப்பணை, வாய்க்கால் பாசனம் என்றெல்லாம் பேசுவார் என்பதை உடன் வந்த அமைச்சர்களே எதிர்பார்க்கவில்லையாம். அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர், ‘அண்ணே இந்தத் தகவல்கள் எல்லாமே புதுசா இருக்கு...’ என்று சொல்ல, அருகே இருந்த செங்கோட்டையனை மட்டும் பார்த்துச் சிரித்திருக்கிறார் எடப்பாடி. காரணம், அந்தப் பொறியாளரைக் கோவையிலிருந்து அழைத்து வந்தது செங்கோட்டையன்தானாம். ஆனால், செங்கோட்டையனும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லையாம்!” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “தடுப்பணை கட்டும் ஒப்பந்தங்களையும் எடப்பாடி இதேபோல ரகசியமாக அவரோட சொந்தக்காரங்களுக்கே கொடுக்காமல் இருந்தால் சரி...” என்ற கமெண்ட்டைப் போட்டுவிட்டு, ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது.
“வைகோவிடமே மறுபடியும் போகப் போகிறார்... திமுகவுக்கு வரப் போகிறார்... என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த நாஞ்சில் சம்பத்தின் டிராக் திடீரென மாறியிருக்கிறது. சென்னையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நடத்திய பட்டிமன்றம் ஒன்றில் இன்று நடுவராகப் பங்கேற்றுப் பேசியிருக்கிறார் சம்பத். அந்த விழாவில் திவாகரனைப் புகழ்ந்து தள்ளிவிட்டாராம். கூட்டத்துக்கு வரும்போதும் சரி, போகும்போதும் சரி... திவாகரன் கட்சிக் கொடி கட்டிய காரில்தான் பயணித்திருக்கிறார் சம்பத். அண்ணாவும், திராவிடமும் திவாகரன் கட்சியில் மட்டும்தான் இருக்கிறது என்று பேச ஆரம்பித்திருக்கிறார் சம்பத். நேரடியாக எதுவும் இதுவரை சொல்லவில்லை என்றாலும் விரைவில், திவாகரன் கட்சியில் சம்பத் இணைந்தார் என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டது வாட்ஸ் அப்.
வாட்ஸ் அப் மெசேஜ்தான் அடுத்து வந்தது. “சிறையில் இருக்கும் சசிகலா இப்போது படிப்பதைவிட டிவி அதிகம் பார்க்க ஆரம்பித்திருக்கிறாராம். முன்பு சிறைக்குள் தூர்தர்ஷன் மட்டுமே பார்க்க அனுமதி இருந்தது. ஆனால், இப்போது அதையும் தாண்டி சில சேனல்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறதாம். பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலாவுக்கு தமிழ் சேனல்களைப் பார்க்க அனுமதி வழங்கியிருக்கிறார்களாம். சில மணிநேரம் டிவியில் செலவிடும் சசிகலா, இப்போது அடிக்கடி கடிதங்களும் எழுத ஆரம்பித்திருக்கிறாராம். அதிமுக நிர்வாகிகள் சிலருக்கு, தினகரனுக்கு, ஜெயா டிவிக்கு எனப் பலருக்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுதியபடியே இருக்கிறாராம். கோர்வையாக இல்லை என்றாலும் எளிய தமிழிலும் வரும் சசிகலாவின் கடிதங்களை ஆச்சரியமாகவும் பொக்கிஷமாகவும் பார்க்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்! சிறை விதி அனுமதித்தால், நமது எம்.ஜி.ஆரில் சசிகலாவின் கடிதத்தை தினமும் வெளியிடலாமா எனவும் ஆலோசனை நடந்துவருகிறதாம்!” என்று முடிந்தது மெசேஜ். அதைக் காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்

No comments

Powered by Blogger.