நான் வானத்தில் இருந்து வந்து குதித்த அரசியல்வாதி இல்லை-மனோ!

மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள வெற்றி எங்களின் வெற்றி என கூறவிரும்புகிறேன் என்று தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) நடைபெற்ற பண்டாரவன்னியனின் நினைவுநாளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நான் புதிதாக முளைத்த அல்லது, வானத்தில் இருந்து வந்து குதித்த அரசியல்வாதி இல்லை.

புதிய அமைச்சராக இருக்கலாம் ஆனால் வரலாறு அறிந்த வரலாற்றிலே பங்களிப்பு செலுத்திய ஐனநாயக போராளி என இங்கு கூறிக்கொள்கின்றேன். மேலாதிக்கவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பண்டார வன்னியன் சிலை அமைக்கப்பட்டது.

அந்த நேரத்திலும் குள்ள நரித்தனமாக அவரது பெயரை வன்னி பண்டா என மாற்றினார்கள். அவர் ஒரு வீரன் எமக்கான முன்னோடியாக அவர் விளங்குகின்றார். ஒரு இனத்திற்கும் மதத்திற்கும் உரிய நாடாகவிருந்தால் இது இரண்டு நாடாகிவிடும்.

அவ்வாறான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று பேரினவாதிகளை நான் கேட்கின்றேன். நேற்று கூட மாகாணசபை தேர்தலிற்கான எல்லை நிர்ணய அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு எம்மீது திணிக்கப்பட்டது.

அந்த முயற்சியை நானும் சில தமிழ் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பேதமில்லாமல் முறியடித்திருந்தோம்.

நேற்றைய தினம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த அறிக்கை தோற்கடிக்கப்படுவதற்காக வாக்களிக்க செய்தமையின் பின்னால் உள்ள வெற்றி எங்களின் வெற்றி என கூறவிரும்புகிறேன்.

அந்த நிலையில் சிறுபான்மை கட்சிகளாக இருந்து கொண்டு எங்களை வழிநடாத்தி சிறுமைப்படுத்துகிறார்கள் என்று ஆணவத்துடன் எங்களை பார்த்து பேசியவர்கள் எல்லாம் நேற்று எங்கள் காலடியிலே விழுந்து நாம் சொல்வதைகேட்டு அதற்கு எதிராக வாக்களித்தார்கள்.

அந்த அறிக்கை நேற்று நாடாளுமன்றத்திலே நிறைவேற்றபட்டிருக்குமானால் மாகாணசபை முறைமை கேள்விக்குறியாக்கப்படிருக்கும். அதனை நாம் முறியடித்திருக்கின்றோம். மாகாணசபை தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் கட்டமைப்பு அல்ல.

புதிய அரசியல் அமைப்பு வருமா இல்லையா என்று எனக்கு தெரியாது வந்தால் நல்லம். வரும் என்று நான் சொல்லமாட்டேன் அதற்காக நாம் முயற்சி செய்யாமல் இருக்க முடியாது.

கடந்த பல மாதங்களுக்கு முன்னால் இந்த மாகாண சபை முறைமை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆளும் கட்சியில் பங்காளிகளாக இருக்கும் எங்கள்மீது அழுத்தம் செலுத்தி பல வந்தமாக வாக்களிக்க வைத்ததன் பின்னணியிலே கூட்டமைப்பு சார்ந்த ஒருவரும் இருக்கிறார்.

அது உங்களுக்கு தெரியும். இந்த நாட்டிலே 19 இனக்குழுமங்கள் இருக்கிறது அதனை எமது அமைச்சு ஆவணப்படுத்தியுள்ளது. அவர்கள் தமது உரிமைகளைபோராடி பெற்றுக்கொள்ள வேண்டும் அதுபோல தமிழ் மக்களும் தமக்கான உரிமைகளை போராடியே பெற்றுக்கொள்ள வேண்டும்.

அழுத பிள்ளைக்கே பால் கிடைக்கும் அது எளிமையான உண்மை. அதுபோல குரல் எழுப்பாமல்,போராடாமல் சும்மாயிருந்துவிட்டு உரிமை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

போராடிகிடைப்பதை தட்டிபறிப்பதற்கும் யாரும் முயல கூடாது. ஐனாதிபதியோ அல்லது பிரதமரோ, பௌத்த மகாதேரர்களாக இருந்தாலும் கூட இது ஒரு பல்லின நாடு, பல மொழி பேசும் நாடு என்பதை ஏற்றுகொண்டால் தான் இலங்கை ஒரே நாடு என்ற அர்த்தம் பொருந்தும்.

தமிழர்களின் அபிலாசைகளை பூர்தி செய்ய கூடிய ஒரு தீர்வு திட்டத்தை இலங்கை அரசு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்“ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.