ரெலோவில் இருந்து விலகினார் – கணேஸ்வரன் வேலாயுதம்!

தமிழ் ஈழ விடுதலை இயக்க கட்சியில் இருந்து (ரெலோ) விலகுவதாக கணேஸ்வரன் வேலாயுதம் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்ற நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
நான் எனது விலகல் கடிதத்தை கட்சியின் செயலாளர் ந.ஸ்ரீகாந்தாவுக்கு கடந்த 2 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளேன்.
கடந்த 30 வருட போரில் பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு கட்சியுடன் இணைந்து என்னால் மக்களுக்கு பூரண உதவிகளை செய்ய முடியவில்லை. கல்வி பொருளாதார அடிப்படை வசதிகளின்றி அல்லல் படும் மக்களுக்கு இதுவரை திருப்தியான எந்தவொரு தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை.
அத்துடன் தமிழ் விடுதலை இயக்கம் என்ற கட்சி தனித்துவமான ஒரு தனிக்கட்சியாக செயற்படவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியாக செயற்படுவதால் சுயமாக முடிவெடுத்து செயற்பட முடியவில்லை.நான் எமது மக்களின் கல்வி தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதில் எனது முழு நேரத்தையும் செலவிட விரும்புகின்றேன்.
மக்களுக்குத் தேவையான சேவைகளை செய்ய வேண்டும்.அதற்கு அனுமதிகள் அதிகாரங்கள் தேவை.ஆகவே மாகாண சபையில் அங்கத்துவம் என்பது அவசியமாகும். இது தொடர்பில் சேவைகளைச் செய்பவர்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம். மாகாண சபையின் ஊடாக வேண்டிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளேன்.
இதுவரை காலமும் அரசியலில் இல்லாதா சேவை மனப்பான்மை உடையவரை நான் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.