தமிழர்களுக்கு ஒரேயொரு திடமான பாதுகாப்பு கல்வியே.!

கல்வியே தமிழர்களுக்கு ஒரேயொரு திடமான பாதுகாப்பு என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு 194 புதிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கல்வி பயிற்றலில் எமக்கென ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது. போர்க்காலமும் போர்ப் பாதிப்பும் அதனைக் குழப்பி விட்டிருந்தாலும் மீண்டும் அந்தப் பாரம்பரியக் கோலைக் கையேற்று ஓட்டத்தைத் தொடர சித்தமாய் இருக்க வேண்டும். கல்வி தான் எமது ஒரேயொரு திடமான பாதுகாப்பு.

ஆசிரியத் தொழில் என்பது இறைபணிக்கு ஒப்பானதாகும். உங்களிடம் கையளிக்கப்படுகின்ற மாணவர்கள் புதிய புதிய விடயங்களை தேடிக்கற்பதற்கு ஆவலாக உள்ளார்கள் என்பதை மனத்தில் இருத்தி புதிய புதிய விடயங்களை மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் உறுதியாகவும் அவர்களின் மனங்களில் பதியக்கூடிய வகையில் கற்பித்தல்களை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நீண்டகால யுத்தத்தின் விளைவாக பல கோணங்களிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் வடபகுதியில் உள்ள 12 கல்வி வலயங்களிலும் அமைந்துள்ள பாடசாலைகளில், கல்வி கற்பிக்கப் போகின்றீர்கள்.

இந்த மாணவ மாணவியருக்கு கல்வி அறிவை விரைவாகவும் திறமாகவும் புகட்டி அவர்களையும் ஏனைய பகுதிகளில் உள்ள மாணவ மாணவியரின் தரத்திற்கு உயரச் செய்வதற்குப் பாடுபடுங்கள்.

நீங்கள் காட்டுகின்ற அக்கறையும், ஆர்வமும், அன்பும் உங்களிடம் கல்வி கற்கவிருக்கின்ற மாணவ மாணவியரின் உளம்சார், உடல்சார், அறிவுசார் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருப்பன’ என தெரிவித்துள்ளார்.

#c.v.vickneswaran     #jaffna  #studying

No comments

Powered by Blogger.