இறுதி நிகழ்வு, செல்ல பயந்த எடப்பாடி!

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. “ராஜாஜி ஹால்... ரவுத்திர ஸ்டாலின் - செய்தியை மின்னம்பலத்தின் காலை 7 மணிப் பதிப்பில் படித்தேன். ஸ்டாலினா இது என ஆச்சரியப்படும் அளவுக்கு அதிசய மாற்றங்கள்!” என்று வந்து விழுந்தது முதல் மெசேஜ்.

தொடர்ந்து அடுத்த மெசேஜ் வந்தது.

“அதிமுகவை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்க்காமல், ரொம்பவே அடக்கியே வாசிக்கிறார் ஸ்டாலின் என அவர் மீது ஒரு விமர்சனம் இருந்து வந்ததை மறுக்க முடியாது. ஆனால், அந்த விமர்சனங்கள் அத்தனையும் தூள் தூளாக்கிவிட்டார் ஸ்டாலின்.

கலைஞருக்கு மெரினாவில் இடம் தரமுடியாது என தமிழக அரசு அறிவிப்பு வந்தபோதும் சரி... கலைஞருக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி வந்தபோதும் சரி... ஸ்டாலினின் கோபத்தை அருகில் இருந்து பார்த்தவர்கள் மிரட்சியோடு சொல்கிறார்கள். ‘தளபதிக்கு இப்படி ஒரு கோபம் வருமா என நாங்களே பார்த்தது இல்லை. தலைவருக்கு மெரினாவில் இடம் இல்லை என கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை வந்ததில் இருந்தே அவரது கோபம் குறையவில்லை. 7-ம் தேதி இரவு காவேரி மருத்துவமனையில் இருந்தபோதே தளபதிக்கு இந்த தகவல் சொல்லப்பட்டது. அப்போதே தனது வருத்தத்தை முரசொலி செல்வத்திடம் பகிர்ந்துகொண்டார்.

ஸ்டாலினைச் சுற்றியிருந்த குடும்பத்தினர், திமுக மூத்த நிர்வாகிகள் அப்போது கலைஞர் காலமான பதற்றத்தில் இருந்தனர். அவர்களில் சிலர் அறிவாலயத்தில் அடக்கம் செய்துவிடலாமா என்றும், காந்தி மண்டப வளாகத்தையே ஏற்றுக் கொண்டுவிடலாமா என்று கூறிக் கொண்டிருக்கையில் ஸ்டாலினோ மெரினாவில்தான் தலைவரை அடக்க செய்யணும் என உறுதியாகக் கூறினார். மருத்துவமனையில் இருந்த வழக்கறிஞர் வில்சனை அழைத்தும் பேசினார் ஸ்டாலின்.

கலைஞர் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சுக்கு முன்னாள் காரில் சென்ற ஸ்டாலின் முகத்தில் வருத்தத்தையும், சோகத்தையும் விட கோபமே அதிகமாக தெரிந்தது. கோபாலபுரம் வீட்டுக்கு கலைஞர் உடல் போய் சேரும் முன்பே, நீதிமன்றத்துக்குப் போக முடிவெடுத்துவிட்டார் ஸ்டாலின்.

இரவு வழக்கின் தீர்ப்பு மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தகவல் அவருக்கு சொல்லப்பட்ட போது, ‘என்ன நடந்தாலும் தலைவரை மெரினாவில்தான் அடக்கம் செய்யணும். அதுக்காக யாருகிட்ட வேணுனாலும் நான் பேச தயாரா இருக்கேன்’ என்றுதான் சொல்லிக் கொண்டே இருந்தாராம்.

மறுநாள் ராஜாஜி ஹாலில் நடந்தவை மின்னம்பலத்தின் செய்தியில் இருக்கிறது. அதில் இல்லாத ஒரு தகவலை சொல்கிறேன். ‘ராஜாஜி ஹாலுக்குப் பின்புறம் எடப்பாடி குழுவினருடன் பேசிவிட்டு, கலைஞர் உடலுக்கு அருகே ஸ்டாலின் வந்து நின்று கொண்டார். அதன் பிறகுதான் எடப்பாடியும் மற்ற அமைச்சர்களும் வந்தார்கள். ஸ்டாலினை பார்த்து வணக்கம் சொன்னார்கள். பதிலுக்கு ஸ்டாலினும் வணக்கம் சொன்னார். அப்போது ஸ்டாலின், ‘இப்போ உங்களுக்கு சந்தோஷமா?’ என எடப்பாடியை பார்த்து சிரித்தபடியே. ஆனால், கண்களில் கோபத்தை வைத்துக் கொண்டு கேட்டார் பாருங்க... நாங்களே மிரண்டுட்டோம்’ என்கிறார்கள் அப்போது ஸ்டாலினைச் சுற்றி நின்ற நிர்வாகிகள்.

கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்த தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயகுமார் மட்டுமே வந்தார். இதற்கு காரணத்தை, அதிமுகவில் இருப்பவர்களிடம் விசாரித்தேன். ‘கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வில் எடப்பாடியும், பன்னீரும் பங்கேற்பதாகத்தான் முதலில் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், ராஜாஜி ஹாலில் ஸ்டாலின் காட்டிய கோபம்தான் போக வேண்டாம் என முடிவுக்கு வந்தார்கள்.

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் முதல்வரை தொடர்பு கொண்டு, ‘அவங்க கோபம் இன்னும் கொஞ்சமும் குறையவில்லை. என்கிட்டயும் ரொம்பவே டென்ஷன் ஆனாரு. இந்த சூழ்நிலையில் நீங்க அங்கே போக வேண்டாம். எதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனால், அது உங்களுக்குதான் அசிங்கம். அதனால் அரசு சார்பாக யாராவது ஒரு அமைச்சர் போனாலே போதும் என சொல்லியிருக்கிறார்.

பன்னீரை போகச் சொல்லி எடப்பாடி சொன்னாராம். பன்னீரோ, ‘அது சரியா வராதுங்க... நாங்க வீட்டுக்கு போய் கலைஞரை பார்த்த போது இருந்த சூழ்நிலை வேற... இப்போ வேற! எம்.ஜி.ஆர் இறந்தபோது எப்படி, அதிகாலை நேரத்துல கலைஞர் வீட்டுக்கு வந்துட்டு வேகமாக கிளம்பி போய்ட்டாரோ அப்படியான ஒரு சூழ்நிலைதான் இப்போதும் இருக்கு. இதுல நான் போய் ரிஸ்க் எடுக்க விரும்பலை. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியும் போக மறுத்துவிட்டார்களாம்.

அதன் பிறகுதான், ஜெயகுமாரிடம் பேசி அவரை மட்டும் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தார். ஜெயகுமார் அங்கே போனாலும் ஒருவித பதட்டத்துடந்தான் உட்கார்ந்து இருந்தார். கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய வேகத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டார் ஜெயகுமார்.

இறுதி நிகழ்வுகள் நடந்த இடத்தில் ஜெயகுமார் இருப்பதை வெளியே இருந்த திமுகவினர் அறிய வில்லை. எல்லாம் முடிந்து அவர் வெளியே வரும்போதுதான் ஜெயகுமாரை பார்த்திருக்கிறார்கள். அப்போது ஜெயக்குமாரின் காதுபடவே, ‘எடப்பாடி மட்டும் வந்திருந்தா நடக்குறதே வேற’ என்று கொதித்து கோஷம் எழுப்பினார்கள். சிலர் ஜெயகுமாருக்கு எதிராக முழக்கமிட முயல, ‘இவர் மீனவ நண்பன்யா... இவரை எதிர்க்காதே’ என்று திமுக நிர்வாகிகளே சொல்லி அமைதிப்படுத்தியிருக்கிறார்கள். வெளியே வந்த ஜெயக்குமார், ‘எனக்கு எதுவும் பயம் இல்லை. நான் எப்பவும் கலைஞரை திட்டியது இல்லை. இடம் கொடுக்காததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று ஜெயகுமார் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னாராம்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். “கலைஞர் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. வெளியூரில் இருந்து வந்த திமுகவினர் ஊர் திரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். இனி ஸ்டாலின் என்னவெல்லாம் செய்யப் போறாரோ.. எப்படியெல்லாம் குடைச்சலை கொடுக்கப் போகிறாரோ என்ற பயம் அதிமுக தரப்பில் அப்பட்டமாகவே தெரிய ஆரம்பித்துவிட்டது. “ என்ற ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது.

#india  #tamilnews  #tamil  #kalanger  #jeyakumar

No comments

Powered by Blogger.