குள்ள மனிதர்களினால் அராலி பகுதிகளில் அட்டகாசங்களுடன் அச்சுறுத்தல்கள்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குள்ள மனிதர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அட்டகாசங்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் அங்குள்ள மக்கள் இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைப்பதாக யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனாலும் அவ்வாறான குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தாம் சம்பவ இடங்களிற்கு சென்று பார்க்கின்ற போது அங்கு சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றதாகவோ அல்லது அத்தகைய சம்பவங்கள் தொடர்பிலோ தமக்கு இதுவரையில் எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் வட்டுக் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதன் போது வட்டுக் கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனாலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற இடங்களுக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டிருந்ததாகவும் அத்தகைய குள்ள மனிதர்களை இதுவரையில் யாரும் இணங்காணவில்லை என்றும் தெரிவித்திருக்கும் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி இந்த குள்ள மனிதர்கள் தொடர்பில் எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் வட்டுக் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்டுக் கொண்டார். மேலும் இந்தக் குள்ள மனிதர்கள் தொடர்பில் ஆராய நாளை எட்டாம் திகதி விசேட கலந்துரையாடலொன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது பொலிஸார் பொது மக்கள் அரசியல்வாதிகள் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளும் வகையில் நாளையதினம் சுழிபுரத்தில் இக் கலந்துரையாடலொன்று  நடைபெறவிருக்கின்றது. அங்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற குள்ள மனிதர்கள் ஆழமாக ஆராயும் வகையிலையே இக் கலந்துரையாடல் நடைபெறுவதாகவும் இதில் அனைவரும் லந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


#jaffna   #Tamilnews   #Arallei  #Afright  #Tamilnews #srilanka

No comments

Powered by Blogger.