சட்டையில் வாசகம் எழுதி முழக்கமிடும் தொண்டர்கள்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருக்கும் தொண்டர்களில் சிலர் தங்களது சட்டை முழுவதும் “கலைஞர் வாழ்க, நீங்கள் நூறாண்டுகள் வாழ வேண்டும்” என எழுதி வைத்து முழக்கமிட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரைச் சந்திக்கச் சென்ற அரசியல் கட்சித் தலைவர்களும் இதனை உறுதிப்படுத்தினர். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், காங்கிரஸ் தலைவர், தமிழக முதல்வர் என அனைவரும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர்.

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 6) இரவு முதல் அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நலம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாகவும், அவருடைய உடலுறுப்புகளை இயங்க வைப்பது சவாலாக உள்ளது எனவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்துத் தகவலயறிந்த திமுக தொண்டர்கள் பலர் நேற்றிரவு மருத்துவமனை முன்பு திரண்டனர்.

”எழுந்து வா தலைவா… மீண்டும் அறிவாலயம் வா தலைவா… எமனே இங்கிருந்து ஓடிப்போ”

என்று முழக்கமிட்டு வருகின்றனர்.
மேலும் சில தொண்டர்கள் அவர்கள் தங்களது சட்டையில் இதுபோன்ற வாசகங்களை எழுதி வைத்துப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.