கல்முனையில் தமிழ் மக்களின் எதிர்ப்பையடுத்து அடிக்கல் நாட்டு விழா இரத்து!

கல்முனை பொது மயான வீதியிலுள்ள மக்கள் குடியிருப்பிற்கு மத்தியில் தேசிய கட்டிட நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் அமைப்பின் கல்முனை கிளை அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(சனிக்கிழமை) நடைபெறவிருந்த நிலையில், அப்பகுதி தமிழ் மக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த நிகழ்வு கைவிடப்பட்டுள்ளது.

கல்முனையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் குறித்த அலுவலகத்திற்கான கட்டிடம் அமைக்கப்படவிருந்தது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கட்டிட நிர்மான ஒப்பந்தக்காரர்கள் அமைப்பின் தலைவர் அத்துல பிரியந்த கலகொட ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைக்கவிருந்தனர்.

எனினும் அப்பகுதி தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பையடுத்து அடிக்கல் நாட்டு விழா இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், சந்திரசேகரம் இராஜன், கே. சிவலிங்கம் ஏ.ஆர். செலஸ்றினா கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்தின தேரர் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், இது தொடர்பில் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் எம்.எம். முஹம்மத் கனி, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே. லவநாதன் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அடிக்கல் நாட்டும் வைபவம் இடைநிறுத்தப்பட்டது.

இதேவேளை, குறித்த அடிக்கல் நாட்டும் விழாவிற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பெயர்பலகையும் நாட்டப்பட்டு பொதுக் கூட்டத்திற்கான மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.