சம்பந்தனை வழிநடத்தும் மஹிந்த அணி!

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படலாம் என்று கெஹலிய ரம்புக்வெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு பொரளை என்.எம். பெரேரா ஞாபகார்த்த நிலையத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே 53நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருப்பது 16 உறுப்பினர்கள்தான். ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது கூட்டு எதிர்க்கட்சி 70 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற விவாதங்களின் போது எங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்வதற்காக நாங்கள் சம்பந்தனின் பின்னால் அலைந்து திரிய வேண்டியுள்ளது.

இதனை சபாநாயகரும் அறிவார். ஆனாலும் அவர் மௌனமாக இருந்து கொண்டிருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு நாம் விடுத்த வேண்டுகோள் தொடர்பிலும் அவர் உரிய முறையில் பதிலளிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் அவரை கௌரவ சபாநாயகர் அவர்களே என்று விளிப்பதற்கே தயக்கமாக உள்ளது.

இந்த நிலையில் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.