எந்திரன் கதை என்னுடையது-ஷங்கர்!

எந்திரன் கதைத் திருட்டு வழக்கில் இயக்குநர் ஷங்கர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் எந்திரன். 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் 2.ஓ என்ற பெயரில் தற்போது தயாராகி வருகிறது.

எந்திரன் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் “1996ஆம் ஆண்டு உதயம் என்ற பத்திரிக்கையில் ஜூகிபா என்ற பெயரில் தொடர்கதை எழுதினேன். அந்தக் கதையை என்னிடம் எந்த அனுமதியும் பெறாமல் ஷங்கர் படமாக எடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் காப்புரிமை சட்டப்படி 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இயக்குநர் ஷங்கர், கலாநிதி மாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் மீது வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்துவருகிறது. இதனையடுத்து கடந்த ஜூலை 26ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, “ஷங்கர் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார். இவை அனைத்தும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தது.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 6) பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “என்னுடைய கதைக்கும், எதிர்மனுதாரர் ஆரூர் தமிழ்நாடன் சொல்லும் கதைக்கும் சம்பந்தம் இல்லை. நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்த வழக்கில் என் தரப்பில் சில முக்கியமான ஆவணங்களை இதுவரை தாக்கல் செய்யவில்லை. எந்திரன் படத்தின் கதையை முத்திரையிடப்பட்ட உரையில் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன். படத்தின் கதையைக் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறேன். இந்த இரண்டு ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் ஷங்கர் குறிப்பிட்டிருக்கிறார். விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
Powered by Blogger.