மகாவலி திட்டத்தை கைவிடும் வரை போராடுவோம்

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் மகாவலி நீரை வழங்குவதற்கான திட்டம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை கபளீகரம் செய்வதற்கு எதிராக தொடர்ந்து போராடவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மகாவலி திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை எதிர்வரும் 28 ஆம் திகதி நடத்தவுள்ள போராட்டத்திற்கு தாம் முழு ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் அறிக்கையில் குறிப்பிடுகையில், “வடக்கு கிழக்கை நிரந்தரமாகப் பிரிப்பதற்கும், எமது பிரதேசத்தில் அரச அனுசரணையுடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, எம்மை எமது பிரதேசத்திலேயே சிறுபான்மையினராக்குவதற்கும் அரசினால் மேற்கொள்ளப்படும் முயற்சியை முறியடிக்க வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும். அந்த வகையில் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையின் கண்டனப் பேரணிக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளது.

அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், தமிழினத்தின் மரபுரிமையை திட்டமிட்டு சிதைப்பதுடன் இனப்பரம்பலையும் மாற்றியமைத்து, தமிழினத்தின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளாகும்.

மகாவலி அபிவிருத்திதிட்டம் என்ற போர்வையில் கபடநாடகம் ஒன்றை அரசு மேற்கொண்டுவருகின்றது. இதன் வெளிப்பாடே நெடுங்கேணி பிரதேசசபைக்கு 14 சிங்கள உறுப்பினர்களும் 11 தமிழ் உறுப்பினர்களும் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட நிகழ்வாகும்.

வடக்கு மாகாணத்திற்கு காணி அதிகாரத்தை இல்லாதொழித்து இங்கும் சிங்கள பெரும்பான்மையை நிறுவி தமிழன் மரபுரிமையை வேரறுத்து அரசியல் பொருளாதார கலாசார ரீதியாக தமிழினத்தை மெலினப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை தடத்திட தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.