எனக்குப் பெருமை வேண்டாம்: விஜய் சேதுபதி!

மேற்கு தொடர்ச்சி மலை என்ற தரமான படத்தைக் கொடுத்த இயக்குநர் லெனின் பாரதிக்கு குவியும் பாராட்டுக்கள் அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த நடிகர் விஜய் சேதுபதிக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் பெருமை வேண்டாம் என வெளிப்படையாகப் பேசியுள்ளார் விஜய் சேதுபதி.

மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை பலதரப்பினரும் பார்த்து பாராட்டி வரும் நிலையில், இப்படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வை நேற்று (ஆகஸ்ட் 26) ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில் விஜய் சேதுபதி பேசும்போது, "`வெண்ணிலா கபடிக் குழு' சமயத்திலிருந்தே லெனினை எனக்குத் தெரியும். `பண்ணையாரும் பத்மினியும்' பட சமயத்தில் இந்தக் கதையைப் பற்றி என்கிட்ட சொன்னார். அப்போ என் சம்பளம் 25 லட்சம். என்கிட்ட பணம் இல்ல சார், இப்போதான் லைஃபை ஆரம்பிச்சிருக்கேன். யாராவது தயாரிப்பாளர் வந்தா சொல்றேன், இல்லை என்றால் நானே சம்பாதித்து எடுக்கிறேன். நடுவுல உங்களுக்கு வேற யாராவது தயாரிப்பாளர் கிடைச்சா போயிடுங்க, பிரச்சனை இல்லைன்னு சொன்னேன். ஒரு வருஷம் கழிச்சும்கூட அதையேதான் சொன்னேன். ஆனால், கடைசியில் நான்தான் அந்தப் படத்தை தயாரிக்க வேண்டுமென்று அமைந்தது.

படம் முடிந்து ரெடியானதற்குப் பிறகு பார்த்தேன். உண்மையை சொல்லவேண்டுமானால் எனக்குப் படம் திருப்திகரமானதாக தெரியவில்லை. ஏன்னா எனக்கு சினிமா தெரியும், அறிவிருக்குன்னு நினைத்திருந்தேன். எனக்கு லெனின் மேல் நம்பிக்கை பெருசா இருந்தது, ஒருவேளை நான் எதிர்பார்த்தது வேறயானு ஒரு குழப்பமும் இருந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு படம் இப்போது வெளியாகியிருக்கிறது.



என் படங்களுக்கான விமர்சனங்கள் வரும்போது நிறைய பேர் மேல் கருத்து வேறுபாடும் கோபமும் வந்துள்ளது. இன்றைக்கு எனக்குத் திருப்தி இல்லாத ஒரு படத்தை நீங்கள் பாராட்டும்போதுதான், நீங்க எந்தக் கோணத்தில் ஒரு படத்தைப் பார்க்கிறீர்கள் என்று புரிகிறது, என்னுடைய பார்வையை மாற்றுகிறது. நாம்தான் தவறாக முடிவு பண்ணிட்டோமா என்று நினைத்தேன். செருப்பால் அடிச்ச மாதிரி இருந்துச்சு. இந்தப் படத்தைப் பற்றிய எல்லாப் பெருமைகளும் லெனின் பாரதிக்கு மட்டும்தான். அதில் நான் பங்கு போட்டுக்கொள்ள விரும்பவில்லை. அது சரியும் இல்லை. கலையை யாராலும் சுலபமாக ஜட்ஜ் பண்ண முடியாதுன்னு இப்போது புரியுது. எனக்குப் பாடம் புகட்டின அத்தனை பேருக்கும் என் நன்றி" எனப் பேசினார் விஜய் சேதுபதி.

படத்தின் நாயகன் ஆன்டனி பற்றி அவர் பேசும் போது, “இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆன்டனி, நன்றாக வர வேண்டும். என்னைவிடவும் வளர வேண்டும். அவ்வளவு திறமைசாலி. அவருக்கு உங்களது ஆதரவு வேண்டும்” என்றார்.

மேலும் ஒரு பைசாகூட வாங்காமல் இந்த படத்தை தாய் சரவணன் என்ற விநியோகஸ்தரிடம் கொடுத்திருக்கும் விஜய் சேதுபதி, இதன் மூலம் வரும் தொகையை இப்படத்தின் விளம்பரங்களுக்காகச் செலவு செய்து கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.