12ஆவது நாளாக ஹர்திக் உண்ணாவிரதம்!

பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் பட்டேல் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதம் 12ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது.

குஜராத் மாநிலத்தில், கணிசமான அளவில் வசிக்கும் பட்டேல் சமூகத்தினர், தங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என கோரி குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் கடந்த 2015ஆம் ஆண்டு ‘பட்டிதர் அனாமத் அந்தோலன் சமிதி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். அதே ஆண்டு இட ஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டத்தின் போது,வன்முறை ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். இந்திய அளவில் இந்தச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பேரணியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினமான ஆகஸ்ட் 25ஆம் தேதி, பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு ஹர்திக் பட்டேல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இன்றோடு அவரது உண்ணாவிரதம் 12ஆம் நாளை எட்டியுள்ளது. கடந்த 11 நாட்களில் அவர் 20 கிலோ வரை எடை குறைந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் பாஜக எம்.பி. சத்துருஹன் சின்ஹா ஆகியோர் ஹர்திக் பட்டேலை நேரில் சந்தித்து நலன் விசாரித்தனர்.

அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பட்டேல் சமூக தலைவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஹர்திக் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அவர் மறுத்து வருகிறார்.

உண்ணாவிரத போராட்டம் 9ஆவது நாளை எட்டியபோதே, தனது சொத்துகள் தொடர்பாக அவர் உயில் எழுதியுள்ளார். அதன்படி வங்கியில் உள்ள ரூ.50 ஆயிரத்தில், ரூ20 ஆயிரம் அவருடைய பெற்றோர்களுக்கும், மீதமுள்ள தொகை குஜராத்தில் தனது கிராமத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் பசுக்களின் வாழ்விடமான ‘பஞ்ச்ரபோல்’ இல்லத்திற்கும் சேர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.