மீண்டும் ரயிலைக் கவிழ்க்க சதி!

சென்னை வேளச்சேரி - கடற்கரை மார்க்கமாக இயக்கப்படும் பறக்கும் ரயிலைக் கவிழ்க்க, தொடர்ந்து சதிவேலை செய்துவரும் மர்ம நபர்களைக் காவல்துறை தீவிரமாகத் தேடிவருகிறது.

விசாரணை

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று இரவு 7 மணியளவில், வேளச்சேரியிலிருந்து கடற்கரைக்குப் புறப்பட்ட ரயில் வேளச்சேரி- பெருங்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் அடிப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயிலில் இருந்து இறங்கி, தண்டவாளத்தைப் பார்த்தபோது உடைந்த சிமென்ட் கற்கள் காணப்பட்டன. இது குறித்து வேளச்சேரி ஸ்டெஷன் மாஸ்டருக்குத் தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக, திருவான்மியூர் ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

ஏடிஜிபி ஆலோசனை

இதுதொடர்பாக, ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திர பாபு, நேற்று (செப்டம்பர் 4) சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் முதல் வேளச்சேரி ரயில் நிலையம் வரை ஆய்வு மேற்கொண்டார். பறக்கும் ரயிலில் பயணம்செய்து ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் பார்வையிட்டார். பின்னர், வேளச்சேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிமென்ட் ஸ்லாப் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இரண்டாவது முறை

மீண்டும் நேற்று (செப்டம்பர் 4) மாலை பெருங்குடி- தரமணி பறக்கும் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்தது. பறக்கும் ரயிலின் ஓட்டுநர் தண்டவாளத்தில் ஏதோ பொருள் இருப்பதைக் கவனித்து, ரயிலின் வேகத்தைக் குறைத்தார். ஆனாலும் சிமென்ட் கற்கள் மீது ரயில் ஏறி இறங்கியது. உடனடியாக ரயிலை நிறுத்திய ஓட்டுநர், ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். இந்தச் சம்பவம், பயணிகள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியது.

ஏடிஜிபி ஆய்வு செய்த பின்னர், இதுபோன்று இரண்டாவது முறை நடந்திருப்பது பயணிகள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. தற்போது, ரயிலைக் கவிழ்க்க மர்ம நபர்கள் சதி செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி ரவி தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் பறக்கும் ரயில் தண்டவாளப் பகுதியில் போலீசார் ரோந்தில் ஈடுபட உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.