13,500 கிராமங்களில் பள்ளிகள் இல்லை!

இந்தியாவில் 13,500 கிராமங்களில் பள்ளிகளே கிடையாது என்ற அதிர்ச்சித் தகவலை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் இன்று (செப்,16) வெளியிட்டுள்ளது.
இந்திய கல்வித் தரத்தை உலக அளவில் உயர்த்துவதற்கு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி வழங்கி வருகிறது. குறிப்பாக கிராமங்களில் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறை பல்வேறு மாநிலங்களில் கல்வித்தரம் பற்றி ஆய்வு நடத்தியது. இந்தியா முழுவதிலும் மொத்தம் 13,511 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே கிடையாது என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.
இதில் மிசோரம் மாநிலத்தில் மட்டும் தான் பள்ளிகளே இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை ஒன்று கூட இல்லை. இந்த புள்ளி விவரத்தில் வடகிழக்கு மாநிலங்களின் செயல்பாடுகள் மற்ற மாநிலங்களைவிட நல்ல நிலையிலேயே உள்ளது. அதிகபட்சமாக மேகாலயா மாநிலத்தில் மட்டும் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மற்ற மாநிலங்களில் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்காகவே உள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3,474 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே இல்லை என்ற நிலைமை உள்ளது. தொடர்ந்து பிகாரில் 1,493 கிராமங்களிலும், மேற்கு வங்காளத்தில் 1,277 கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இல்லாமல் உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்ட இந்த அறிக்கையில் கோவா குறித்தான எந்த தகவல்களும் இடம்பெறவில்லை.

No comments

Powered by Blogger.