15 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி 15ம் திகதி ஆரம்பம்.!

வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வடக்கில் முதற்கட்டமாக 15 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. இதன்போது வீட்டுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது வடக்கு, கிழக்கில் தலா 25 ஆயிரம் வீடுகள் அமைப்பதென முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் வடக்கில் அமைக்கப்படவுள்ள வீடுகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது.

15 ஆயிரம் வீடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதெனவும் மிகுதி 10 ஆயிரம் வீடுகள் அடுத்த வருடம் நிர்மானிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு இதுதொடர்பிலான உத்தரவை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு உத்தரவிட்டார்.

மேலும் இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1837.4 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது. இதில் வடக்கில் 387.77 கிலோ மீற்றரும், கிழக்கில் 1459.63 கிலோ மீற்றரும் புனரமைக்கப்படுகிறது.

அதாவது வடக்கில் வீதி அபிவிருத்தி சபையின் கீழ் உள்ள 88.5 கிலோ மீற்றர் வீதியும், வீதிஅபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 165.82 கிலோ மீற்றர் நீளமான வீதியும், வடக்கிலுள்ள 34 உள்ளுராட்சி சபையின் கீழ் உள்ள 133.45 மீற்றர் வீதியும் புனரமைக்கப்படவுள்ளது.

கிழக்கில் வீதி அபிவிருத்தி சபையின் கீழ் உள்ள 85 கிலோ மீற்றர் வீதியும், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 228.63 கிலோ மீற்றர் வீதியும், கிழக்கில் உள்ள 38 உள்ளுராட்சி சபையின் கீழ் உள்ள 1146 கிலோ மீற்றர் வீதியும் புனரமைக்கப்படவுள்ளது. 

No comments

Powered by Blogger.