குரு பெயர்ச்சி பன்னிரு ராசிகளுக்கான பொது பலன்கள் 2018-2019

குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொது பலன்கள் 2018-19. இதனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்.

இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.10.2018 புரட்டாசி 24-ஆம் நாள் விடியற்காலை 3.16க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.

குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு சாதகமாக இருக்கும். யாருக்கெல்லாம் குரு பலம் வருகிறது….?

ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ராசியினருக்கு குருபலம் வருகிறது. இந்த ராசியினருக்கு எல்லாம் குரு பெயர்ச்சி அதிக சாதகமாக இருக்கிறது..இந்த ராசியினர் குருவால் அதிக நன்மைகளை பெறுவார்கள்.


மேஷம்: 
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

அஷ்டம ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்: எப்பொழுதும் நம்பிக்கையுணர்வுடன் செயல்பட துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் பொதுவாக வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியிடங்களில் செல்வாக்கு உயரும்.

குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை போன்றவை சரியாகும். சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நடந்தேரும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.

தொழிலில் சில நஷ்டங்களையும், நலிவுகளையும் சந்தித்திருப்பீர்கள். எடுத்த காரியத்தில் தடை, முதலீடு செய்த அசல் கிடைக்காமல் நஷ்டம் என மோசமாக இருந்த காலகடம் மாறும். தொழிலில் இதுவரை விரையமான பணம் திரும்ப கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை வரவேண்டிய பணம் வந்து சேரும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களின் காரியங்கள் அனைத்திலும் குரு பகவான் துணை நிற்பார். காரியத்தடைகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்கள் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் பின்னடைவு இல்லை.

அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் தரும் பெயர்ச்சியாக இருக்கும். உங்கள் மேலிடத்தில் இருந்து உங்களுக்கு சில புதிய மற்றும் முக்கிய பொறுப்புகள் தருவார்கள்.

கலைத்துறையினர் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கதை எழுதுபவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும்.

அஸ்வினி: இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் பிரச்சனைக்கு முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் தெளிவாக இருந்தாலே நல்லது நடக்கும்.

பரணி: இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முற்படுவீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் உங்களுக்கு உண்டு. ஆனால் வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் நிலை காணப்படும்.

கார்த்திகை 1-ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியால் தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். வார்த்தைகளை கோர்த்துப் போட்டு பேசுவது நன்மை தரும்.

பரிகாரம்: தினமும் விநாயகரை வழிபட்டு காரியத்தை துவங்குங்கள்.


ரிஷபம்: 
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

களத்திர ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்: பிறர் மனதை புரிந்து கொண்டு செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் தொழிலில் ஏற்றம் காணப்படும் என்பதை பொதுவாக உங்கள் நட்சத்திரத்திற்கு சொல்ல்லாம். மற்றவர்கள் தலையீடு குடும்பத்தில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது.

குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலையில் தொய்வு இருந்திருந்தால், அவர்கள் முன்னேற குரு பகவான் அருள்புரிவார். தந்தையாருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். இருவரும் பேசி முடிவுகளை எடுப்பீர்கள்.

தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை ஏமாற்றுபவர்களை கண்டுபிடிப்பீர்கள். ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செயல்படும் எண்ணம் தோன்றும். யாரையும் நம்பி ஏமாறாமல் கவனமுடன் இருப்பீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். வேலையில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். முழு மனதுடன் வேலையில் ஈடுபடுவீர்கள்.

பெண்களில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் தங்களின் பேச்சுத்திறமையால் முன்னேற முடியும். எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.

அரசியல்துறையினர் கட்சிப் பணிகளில் சிரத்தையுடன் செயல்பட்டால் உங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கட்சித் தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கலைத்துறையினருக்கு தாயாரிப்பாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். கவலை வேண்டாம்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் அனைவருடைய ஒத்துழைப்பும் ஒருசேர கிடைக்கப் பெறுவீர்கள். யார் எவர் என்று பாராமல் அனைவருக்கும் உதவியும் புரிவீர்கள். உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பார்கள்.உடன் பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்துப் போவது உத்தமம்.

ரோகிணி: இந்த குரு பெயர்ச்சியில் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் எழலாம். கவனமுடன் இருப்பது மிக முக்கியம். கிடைத்த வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்துங்கள். திருமண முயற்சிகள் கை கூடும். நேரம் கிடைக்கும் போது ஓய்வு அவசியம்.

மிருக சீரிஷம்1, 2 ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். கைக்கு வராது என்றிருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை குறித்த நேரத்தில் முடித்து அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள

பரிகாரம்: பெருமாள் கோவிலுள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை வலம் வரவும்.


மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்: நல்ல உள்ளத்தால் உயர்ந்த நிலையைப் பெறும் மிதுன ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் தந்தைக்கும் உங்களுக்கும் இருந்த பகைமை உணர்வு மாறும். தொழிலும் ஏற்றம் உண்டாகும்.

குடும்பத்தில் தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்சனைகள் அகலும். சிலருக்கு தந்தையின் உடல் நிலையில் பிரச்சனைகள் இருந்திருக்கும். அதிலும் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி மன நிம்மதி அடைவீர்கள்.

தொழில் செய்பவர்கள் காரியங்களை நீங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரையத்தையும் குறைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொடங்க சூழல் உருவாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகும். உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தவறைத் தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் அடிதடியில் இறங்க வேண்டாம்.

பெண்களுக்கு நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம் போன்ற அனைத்தும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தேர்வில் வெற்றி பெறலாம். அரசியல்துறையினர் தொகுதி மக்கள் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள்.

கலைத்துறையினர் இந்த காலகட்டத்தினை பயன் படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பு முனையான காலமாக இருக்கும்.

மிருக சீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பழமையான கோயில் ஒன்றுக்குச் சென்று வருவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு யோகமான கால கட்டம்.

திருவாதிரை: இந்த குரு பெயர்ச்சியில் ஓயாது உழைக்க வேண்டி வரலாம். உடல் நலனில் சற்று கவனம் தேவை. கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டு வாகனத்தை பிரயோகிக்க வேண்டாம். எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்வது அவசியமாகிறது.

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது உத்தமம். முக்கிய முடிவுகளை சற்று ஒத்திப் போடுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் காதுகளை அது எட்டும்.

பரிகாரம்: மாதந்தோறு, சஷ்டியன்று முருகப் பெருமானுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.


கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ராசியையும், பார்க்கிறார்.

பலன்: மன அமைதியை விரும்பும் கடக ராசி அன்பர்களே! இந்த குருப்பெயர்ச்சியால் குடும்ப நிம்மதியும், லாபமும் அமையப் பெறப் போகிறிரீக்ள். குடும்பத்தில் இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களை அவமானப் படுத்தியவர்கள் எல்லாம் உங்களை ஆச்சரியமுடன் பார்க்கும் காலமாக இது இருக்கும். அதை பயன்படுத்தி உங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.

தொழிலைப் பொறுத்தவரை இதுவரை இருந்து வந்த மந்தநிலையில் இனி ஓரளவிற்கு முன்னேற்றத்தை காணலாம். ஆர்டருக்காக திருப்பி அனுப்பிய அனைவரும் உங்களைக் கூப்பிட்டு புதிய ஆர்டர்களைக் கொடுப்பார்கள்.

உத்தியோகத்தைப் பொறுத்தவரையில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும் அவர்கள் பதவிஉயர்வுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் அனைவராலும் கேளிக்கைக்கு ஆளாகிய நீங்கள் குருவின் அனுகிரகத்தால் ஓரளவிற்கு மதிப்பு, மரியாதையுடன் நடத்தப்பெறுவீர்கள்.

பெண்களில் சிலருக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். திருமண வாழ்வில் விவகாரத்து வரை சென்றவர்கள் கூட குருவின் கடாட்சத்தால் பிரச்சினைகளை தீர்த்து சேர வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த வந்த மந்த நிலை மாறி ஓரளவிற்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு கட்சிப் பணியில் தொய்வு வரலாம். அதிரடி முடிவுகள் கட்சியில் எடுக்கப்படும். கலைத்துறையினருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும். அழகு கூடி காட்சியளிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் வந்து உங்களை மெருகேற்றும்.

புனர்பூசம் 4-ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சி சிலருக்கு திருமண பேச்சு வார்த்தை கைகூடி வரலாம். வாய்ப்புகள் வரும் போது இறைவனை வேண்டி தொடங்குங்கள். எதையும் தள்ளிப் போட வேண்டாம். சிறு தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். கவனமாக இருக்கவும்.

பூசம்: இந்த குரு பெயர்ச்சியில் அவ்வப் போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். உங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்காக சிறு தொகை செலவிட நேரலாம். அவரின் தேவையைக் கருதி பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு பாராட்டுகள் கிடைக்கலாம்.

ஆயில்யம்: இந்த குரு பெயர்ச்சியில் புதிய வேலைக்கு விண்ணப்பிபவர்கள் நல்ல முறையில் செய்யலாம். நிலுவையிலுள்ள முதலீடுகள் கைக்கு கிடைக்க அலைய நேரலாம். நீங்கள் துணிந்து எடுக்கும் முடிவுகளால் எதையும் சாதிப்பீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவியுங்கள்.


சிம்மம்: 
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

சுக ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்: நினைத்ததை நிறைவேற்றத் துடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியைப் பொருத்தவரை நீண்டநாட்களாக இருந்த கடன்கள் அடைக்கப் படுவீர்கள்.

குடும்பத்தில் ஆடை, ஆபரணம், வாகனம் போன்ற நீங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டி வரலாம்.

தொழில் – வியாபாரத்தில் ஏற்றுமதி – இறக்குமதி தொழிலில் நல்ல லாபத்தைக் காண முடியும். உங்களுக்கு தொழிலில் கிடைக்க வேண்டிய நியாயமான பங்குகள் நல்ல முறையில் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதால் உங்கள் நிலையும் உயரும்.

உத்யோகஸ்தர்களுக்கு நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். உடன் பணிபுரிபவர்களிடம் கடன் வாங்கியிருந்தால் அதை வரும் காலங்களில் அதை திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். தொலைந்து போன சில ஆவணங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் புதிய ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் ஓரளவிற்கு திருப்பி கிடைக்கும்.

மாணவர்களுக்கு நட்பு வட்டாரம் அதிகரிக்கும். மேற்படிப்பு விசயங்கள் தள்ளிப் போய்க் கோண்டிருந்ததல்லவா இப்போது அது சரியாகி உங்கள் கல்வியைத் தொடர அழைப்புகள் வரும். அரசியல்துறையினர் தானுண்டு தன் வேலையுண்டு என்று உங்கள் கடமைகளை மட்டும் செய்து வருவீர்கள். கலைத் துறையினருக்கு மூத்த கலைஞர்கள் உங்கள் பெயரை முன்மொழிவார்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

மகம்: இந்த குரு பெயர்ச்சியில் வாய்ப்புகள் நல்லபடி அமைந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாதபடி சூழ்நிலை ஏற்படும். உங்கள் இல்லத்தில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும். களவு போக வாய்ப்புள்ளது.

பூரம்: இந்த குரு பெயர்ச்சியில் பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. கவனச் சிதறல்கள் வந்து போகும். தேவையற்ற மனக் குழப்பமும், சஞ்சலமுமே உங்கள் மனதிற்கு சங்கடங்களை ஏற்படுத்தும். இறைவழிபாடு ஒன்று தான் தக்க தீர்வாக அமையும்.

உத்திரம் 1ம்-பாதம்: இந்த குரு பெயர்ச்சியால் முற்பகுதி அமைதியாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். பிற்பாதியில் சிறு சிறு உடல் உபாதைகளால் அவதிப் பட நேரலாம். ஆதலால் மனசோர்வும் உண்டாகலாம். செலவுகள் ஏற்படும் கால கட்டம். .

பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபமேற்றுங்கள்.


கன்னி:
 (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்: வாய் ஜாலத்தில் மற்றவரை தோற்கடிக்கும் கன்னி ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் தொழிலால் நன்மை நடக்கும் என்பதில் ஐயமில்லை.

குடும்பத்தில் மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் சமாதானத்தில் முடியும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் அனைத்தும் மாறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

தொழிலில் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்து கொண்டிருந்தாலும், அல்லது மூத்த சகோதரர்களுடன் தொழில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல லாபத்தைக் குரு பகவான் கொடுப்பார். வண்டி, வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலில் இருப்போர் நல்ல வளர்ச்சியைக் காண முடியும்.

உத்யோகஸ்தர்களுக்கு பண விஷயங்கள் சீராகும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுக்காமல் வேலையை செவ்வனே செய்து முடித்து நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து காணப்படும்.

பெண்களின் உடலுக்கு அவ்வப்போது மருத்துவ செலவுகள் தேவையில்லாமல் வந்து கொண்டு தான் இருக்கும். உடனே கவனித்தால் பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலைகள் ஆகியவற்றில் ஆர்வம் அதிகரித்து அதில் பரிசுகளும், கேடயங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு மூத்த அரசியல்வாதிகள் உங்களுக்கு நல் வாக்கு வழங்குவார்கள்.

கலைத்துறையினருக்கு நாடகக் கலைஞர்களும், மேடைக் கலைஞர்களும் நல்ல உயர்வான நிலையை அடைவார்கள். மற்றவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லதல்ல.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் தேவையான அளவு பணம் கிடைக்கும். வழக்கத்தை விட அதிக அலைச்சல் இருக்கும். தந்தை வழி சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

அஸ்தம்: இந்த குரு பெயர்ச்சியில் பதவியொன்று கிடைக்க வாய்ப்புகள் அதிகம். மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெகு விரைவில் சிறந்த இடமாற்றம் கிடைக்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் வேலை பார்ப்பவர்கள் அலுவலகத்தில் புகழ் கூடும். அதனால் மனம் களிப்பில் இருப்பீர்கள். குடும்பத்திலும் உங்கள் கை ஓங்கியே இருக்கும். அதனால் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது.

பரிகாரம்: தக்ஷிணாமூர்த்திக்கு எலுமிச்சம்பழ சாதம் செய்து நைவேத்யம் செய்யலாம்.


துலாம்:
 (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் ரண ருண ரோக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்: அமைதியான வாழ்க்கையை விரும்பும் துலா ராசி அன்பர்களே! இந்தக் குருபெயர்ச்சி உங்கள் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு காட்டும் விதமாக அமைகிறது. குடும்பத்தில் அனைவரும் உங்களை மதித்து, உங்கள் பேச்சுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்காள். நீண்ட நாட்களாக உடம்பில் இருந்த நோய் குணமாகும். எந்த தொந்தரவும் இருக்காது .

தொழிலில் இது வரை இருந்த தடைகள் விலகும். நீங்கள் உங்கள் தொழிலின் உச்சத்தை நீங்கள் அடைய வழி வகுக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உத்யோகஸ்தர்கள் உங்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்திருப்பீர்கள். அவை இப்போது உங்களுக்கு விரும்பிய படியே கிடைக்கும். கவலை வேண்டாம்.

பெண்களுக்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். சரியான நேரத்தில் உறங்காமல் தவித்து வந்த காலகட்டங்கள் மாறும். பயணம் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலர் பாதியில் நிறுத்திய படிப்பைத் தொடரவும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அடிக்கடி வெளியூர் சென்று வரவேண்டியதிருக்கும்.

கலைத்துறையினருக்கு யோகமான காலகட்டம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அடிக்கடி வெளியூர் சென்று வருவீர்கள். உங்களின் பெயர் அனைவருக்கும் தெரியும் வகையில் சில முக்கிய படங்களில் நடிப்பீர்கள்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் தாங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கடின முயற்சிக்குப் பின்பே கிடைக்கும். சிலருக்கு பணவரவு கிடைக்க அலைய வேண்டி வரலாம். பண உதவி கிடைக்க தாமதமானாலும் அது கிடைத்து விடும்.

சுவாதி: இந்த குரு பெயர்ச்சியில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் ஆதிக்கம் குறையும். ஆதலால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். மனம் நிம்மதி பெற தியானம் செய்யுங்கள்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் சில அன்பர்களுக்கு கண் சம்மந்தமான நோய் ஏற்பட்டு மறையும். கணவன்,மனைவியரிடேயே பிரச்சினைகள் இருந்தால் சரியாகி விடும். எதிர்பார்த்திருந்த வருமானம் கைக்கு கிடைப்பது மன நிறைவைத் தரும்.

பரிகாரம்: தினமும் ஸ்ரீ ராமரை வணங்க ஏற்றம் உண்டாகும்.


விருச்சிகம்:
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் பஞ்சம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்: தாய் தந்தையரை போற்றும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த குருபெயர்ச்சி பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அவர்கள் விருப்பம் நிறை வேறும்.

குடும்பத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்விர்ர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெரியவர்கள் உங்களுக்கு ஆதர்வாக இருப்பார்கள். உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இந்த குரு பெயர்ச்சி சிறந்த அடிக்கல்லாக இருக்கும்.

தொழிலில் உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள். உங்களின் தொழிலில் நீங்கள் வெற்றி அடைவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இது வரை நீங்கள் அடைந்த மனக்கஷ்டம் இனி தீரும். உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

பெண்களுக்கு பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கவலை வேண்டாம். மாணவர்களுக்கு பணத்தால் தடைபட்ட கல்வியும் சிலருக்கு தொடர வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் மாறும். அரசியல் துறையினருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகமும் உண்டாகும். உங்களைப்பற்றி குறைகூறியவர்கள் உங்களை புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.

கலைத்துறையினருக்கு கதை இலக்கியம் பொறுத்த வரை சிலர் விருதுகள் பெறவும் வாய்ப்பு உள்ளது. சிலர் அரசின் விருதுகளாலும் கௌரவிக்கப் படுவீர்கள்.

விசாகம் 4ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியில் ஏற்கனவே பணியிலிருந்து வருபவர்களுக்கு இது நாள் வரை மறுக்கப்பட்டு வந்த உயர்பதவியொன்று இப்போது கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் வழக்கம் போல் நடந்து வரும்.

அனுஷம்: இந்த குரு பெயர்ச்சியில் அலுவலகம் செல்லும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு உணவருந்தாததால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை.

கேட்டை: இந்த குரு பெயர்ச்சியில் உற்றார், உறவினர்களுடன் விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும்.

பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசம் தினமும் சொல்லி வாருங்கள்.


தனுசு: 
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் லாப ஸ்தானத்திலிருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்: உயர்வான எண்ணத்தை கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியால் அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பத்தில் சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஆன்மீக தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்கள் கூறும் அறிவுரையை கேட்டுக் கொள்ளுங்கள்

தொழில் செய்பவர்கள் கடல் தாண்டி சென்று வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத பண வரவு இருக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அவற்றை சிறப்பாக செய்வதன் மூலம் உங்கள் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவரும்.

பெண்களுக்கு குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை செய்து கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள். மாணவர்களில் தொழிற்கல்வி பயில்வோருக்கு சில சலுகைகள் கிடைக்கும். வெளியூர் சென்று தொழிற்சாலைகளில் செயல்முறையில் பயில வாய்ப்புகளும் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு மந்திற்கு நிம்மதி தரும் சில காரியங்கள் நடக்கும். கட்சித் தொண்டர்கள், மேலிடம் என அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு உங்கள் புகழ் உயரும் அளவிற்கு ஒப்பந்தகங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். அதனால் தன்னம்பிக்கை வளரும்.

மூலம்: இந்த குரு பெயர்ச்சியில் வருமானம் நல்லபடி இருந்தும் வீண் செலவுகள் ஏற்படுவதால் மனம் கவலையில் இருக்கும். குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் எடுக்க சற்று கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

பூராடம்: இந்த குரு பெயர்ச்சியில் புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கைக்கு வர வேண்டிய பாக்கிகள் இப்போது வசூலாகும். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை தடையின்றி கிட்டும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியில் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது.கண்ட நேரங்களில், கண்ட இடத்தில் உண்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பச் சூழ்நிலை மனதிற்கு நிம்மதி தரும்.

பரிகாரம்: தினமும் அம்பாளை வெள்ளை மலர் கொண்டு வழிபடவும். ஸ்ரீ ல்லிதாம்பிகையை போற்றி வழிபடுங்கள்.


மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

லாப ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். பலன்: வாழ்க்கையில் வளமான வாழ்வு வாழ ஆசைப்படும் மகர ராசி அன்பர்களே!

இந்த குருபெயர்ச்சியால் உங்களுக்கு பாக்கியத்திற்கு குறைவிருக்காது. முக்கிய நிகழ்வுகளில் நீங்கள் தான் முக்கியஸ்தர்களாக இருப்பீர்கள்.

குடும்பத்தில் பாக்கியத்திற்குக் குறைவிருக்காது. திருமண யோகம்,. குழந்தை பாக்கியம், புது மனை வாங்குதல், வாகனம் வாங்குதல் போன்ற சுப காரியங்கள் வரிசையாக நடக்கும். பண வரவும் சீராக இருக்கும் என்பதால் அவற்றை சரியான முறையில் முதலீடு செய்யுங்கள். பிற்காலத்திற்கு உதவியாக இருக்கும்.

தொழிலில் சிறப்பான லாபத்தை அடையப் போகிறீர்கள். சரியான முறையில் முதலீடு செய்வீர்கள், உங்கள் லாபம் இரட்டிப்பாகும். சோம்பல் இன்றி உழைக்கும் எண்ணம் தோன்றும். இதனால் உற்பத்தி அதிகமாகும். உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்துடன் இருந்த வந்த சில சச்சரவுகள் முடிவுக்கு வரும். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு கணவனுடன் இருந்துவந்த சில மனக்குழப்பங்கள் தீரும். மனதில் உற்சாகம் பிறக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெளிவடையுங்கள். மேனேஜ்மெண்ட் சம்பந்தமான படிப்புகளில் சிறந்து விளங்குவீர்கள்.

அரசியல்துறையினருக்கு சில முக்கிய பொறுப்புகள் மேலிடத்திலிருந்து கிடைக்கப்பெறும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையே அமையும். கலைத்துறையினர் தற்போது கிடைக்கும் ஊதியத்தை விட அதிக ஊதியத்திற்க்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் எழுதும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். இது நாள் வரை சரியான வேலை கிடைக்க வில்லையே என வருந்தி வந்தவர்களுக்கு அந்நிலை மாறி நல்ல வேலை கிடைக்கும். சிலர் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

திருவோணம்: இந்த குரு பெயர்ச்சியில் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். பொறுமையை கடைபிடியுங்கள். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். நல்லபடியாக அனைத்து விஷயங்களையும் முடித்துக் கொடுப்பீர்கள்.

அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் கிடைக்கும். திட்டமிட்டபடி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சிலர் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் சூர்யபகவானை வழிபாடு செய்யுங்கள். சூரிய நம்ஸ்காரம் செய்யுங்கள்.


கும்பம்: 
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

தொழில் ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்: சிறந்த அணுகுமுறையுடன் முன்னேறத்துடிக்கும் கும்ப ராசி அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியால் வாழ்வில் நிறைய அனுபவங்களை சந்திக்கப் போகிறீர்கள். பலரின் நட்பும் உங்களுக்கு கிடைத்து அதில் நல்ல காரியத்தனத்தையும் நிரூபிக்கப் போகிறீர்கள்.

குடும்பத்தில் திருமணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீங்கள் எதிர்பார்த்திருந்ததை விட சிறப்பான வாழ்க்கை அமையும். உங்கள் மனம் தெளிவடையும். தோற்றப் பொலிவு உண்டாகும்.

தொழிலில் உங்களின் உயர்வு சிறப்பாக இருக்கும். தைரியமாக எதையும் கையாளுவீர்கள். மனதுக்குள் ஒரு இலக்கை வைத்து அதை நோக்கி ஓடுவீர்கள். நேரம், தைரியம், வாக்கு இவை அனைத்தும் உங்கள் வெற்றிக்கு தோள் கொடுக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களின் மேல் வைத்திருந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் அமையும். பதவி உயர்வும், பணி இடமாற்றமமும் உங்களைத் தேடி வரும்.

பெண்களுக்கு நஷ்டத்தில் தொழில் செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த தொல்லைகள் அகலும். மாணவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தால் சில வாய்ப்புகளும், சலுகைகளும் உங்களுக்குக் கிடைக்கும்.

அரசியல்துறையினருக்கு உங்களின் புகழ் அனைவருக்கும் தெரியவரும். உங்களின் ஒரு செயலால் மிகுந்த பாராட்டினைப் பெறப்போகிறீர்கள். கலைத்துறையினருக்கு பொருளாதார வகையில் உங்கள் நிலை உயரும். நீங்கள் எதிர்பாராமல் சில முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் முக்கிய முடிவுகளில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தலாம். முடிவுகளை தள்ளிப் போடுங்கள். அலைச்சல் அதிகம் இருப்பினும் தக்க சமயத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள் அல்சர் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கலாம்.

சதயம்: இந்த குரு பெயர்ச்சியில் சிலருக்கு எதிர்பார்த்திருந்த வேலை இடமாற்றம் பற்றி நற்செய்திகள் வரலாம். அது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மையாகவே அமையும். உடன்பணிபுரிபவர்கள் உங்கள் மீது பொறாமை பட நேரலாம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவது பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். நல்லதொரு நற்பணிகளில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் சிவபெருமானை வழிபட்டு ந்ந்தி தேவரையும் தரிசனம் செய்யுங்கள்.


மீனம்:
 (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பாக்கிய ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் ராசியையும், ஏழாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்: எதிலும் சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாகத் திறனும் உடைய மீன ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் நல்ல சுமூகமான வாழ்க்கையை வாழப் போகிறீர்கள். சுபச் செய்திகளும் வரலாம். உண்மையான உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வீர்கள்.

குடும்பத்தில் சுமூகமான உறவு இருக்கும். இதனால் உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இவை அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும். தொழில் செய்வபரகளுக்கு சில சவாலான சூழ்நிலைகள் அமையும். ஆனாலும் குருபகவானின் துணையால் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இதனால் உங்கள் புகழ் மட்டுமின்றி தொழிலும் லாபத்தை நோக்கி உயரும்.

உத்யோகஸ்தர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வேலையை இடையில் நின்றவர்கள் மீண்டும் தொடருவார்கள். பெண்களில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பயணத்தின் போது கவனமாக இருப்பது அவசியம். சோம்பல் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்து மகிழ்வீர்கள்.

மாணவர்கள் வெளியூர் சென்று சில சான்றிதழ் படிப்புகளை படிப்பீர்கள். இது உங்களின் எதிர்கால வேலைக்கு உதவிகரமாக இருக்கும். அரசியல்துறையினர் வார்த்தைகளை சரியான முறையில் பிரயோகப்படுத்துவது அவசியம். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்தாலே சில பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். கலைத்துறையினருக்கு உங்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இது இருக்கும். பிரபலங்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியில் அலுவலக விசயத்தில் கவனம் தேவை. உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம்.

உத்திரட்டாதி: இந்த குரு பெயர்ச்சியில் சிறு தொழில், வாணிபம் செய்பவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். முடிவுகள் எடுக்கும் போது பெரியோர் அறிவுரை கேட்டு நடப்பது அவசியமாகிறது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரலாம்.

ரேவதி: இந்த குரு பெயர்ச்சியில் குடும்பத்திற்குத் தேவையான பொருள் ஒன்றை வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படக்கூடும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைப் பணம் வரவேணிடி இருந்தால் இப்போது கைக்கு வரும்.

பரிகாரம்: பழைய கோவில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

No comments

Powered by Blogger.