தீவிரவாதப் பாதிப்பு: 3ஆவது இடத்தில் இந்தியா!

தீவிரவாதத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்று ஓர் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா வெளியுறவுத் துறை தீவிரவாதத் தாக்குதல் குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் (செப்டம்பர் 21) வெளியிடப்பட்டது. அதில், உலகில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் ஈராக்கும், இரண்டாம் இடத்தில் ஆப்கானிஸ்தானும் இடம்பிடித்துள்ளன. மூன்றாவதாக இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் மொத்த தாக்குதல்களில் 53 சதவிகிதம் மாவோயிஸ்ட்டுகளால் நடத்தப்படுகின்றன. பயங்கரவாதக் குழு தாக்குதலில் ஐஎஸ், தலிபான் மற்றும் அல்-சபாப் அமைப்புகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் மாவோயிட்ஸ்ட் குழுக்கள் உள்ளன.
2015ஆம் ஆண்டு வரை, தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் பாகிஸ்தான்தான் மூன்றாவது இடத்தில் இருந்தது. 2017ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 89 சதவிகித உயிரிழப்புகள் ஏற்பட்டன. 2017ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 860 தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. அதில், 25 சதவிகிதம் ஜம்மு-காஷ்மீரில் நடந்தவை.
இதுகுறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்களில் பெரும்பாலானவை பாகிஸ்தானின் தூண்டுதலினால்தான் நடப்பதாகத் தெரிவித்தனர். “பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகள் இயங்குவதற்கு பாகிஸ்தான் ஏஜென்ஸிகளும், ராணுவமும் அனுமதி அளிக்கின்றன. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன” என்று கூறினர்.
இந்தியாவில் 2016-17ஆம் ஆண்டில் மாவோயிஸ்ட்டுகளால் நடத்தப்படும் தாக்குதல்கள் குறைந்துள்ளன. 2016ஆம் ஆண்டில் 338 தாக்குதல் நடந்தன. 2017ஆம் ஆண்டில் 295 தாக்குதல் நடந்தன. இருப்பினும், உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை 16 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.