7வது தடவையாக ஆசியக் கிண்ணம் இந்தியா வசம்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில்  இறுதி வரை போராடிய பங்களாதேஷ், இந்திய அணியிடம்    கடைசி பந்தில் நேற்று தோல்வி அடைந்தது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா 3விக்கட்களால்வெற்றி பெற்று தன் ஏழாவது ஆசிய கோப்பை தொடரை வென்றது.


பங்களாதேஷ் 222 ஓட்டங்கள்
நாணயசுழற்சியை வென்ற இந்தியா முதலில்  பந்துவீச்சை தேர்வு செய்தது.   பங்களாதேஷ் ஆரம்பத்துடுப்பாட்ட  வீரர் லிட்டன் தாஸ் சதம் அடித்தார். 121 ரன்கள் குவித்த அவர் தோனியின் ஸ்டம்பிங்கால் வெளியேறினார். மெஹிதி ஹசன் 32, சௌம்யா சர்க்கார் 33 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப
ரன்கள் மட்டுமே எடுத்தனர்.  பங்களாதேஷ்48.3 ஓவர்களுக்கு 222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜாதவ் 2, சாஹல் 1, குல்தீப் 3, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 3 ரன் அவுட்கள் செய்தது குறிப்பிடத்தக்கது. அதே போல தோனி 2 ஸ்டம்பிங் செய்து கலக்கினார்.


இந்தியா தடுமாற்றம்
பங்களாதேஷ்நிர்ணயித்த 223 ரன்கள் இலக்கை துரத்த துவங்கியது இந்தியா. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் தவான் 15 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ராயுடு 2 ரன்களில் வெளியேறினார். நன்றாக ஆடி வந்த ரோஹித் 48 ரன்களில் வெளியேற இந்திய அணி 83 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தடுமாறியது. நிலைத்து ஆடிய ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள் பறக்க விட்டார். நான்காவது சிக்ஸுக்கு ஆசைப்பட்டு தூக்கி அடித்த அவர் 48 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த தோனி, தினேஷ் கார்த்திக்கோடு இணைந்து 54 ரன்கள் எடுத்த நிலையில், தினேஷ் 37 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து   தோனி 67 பந்துகளில் 37 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஜாதவிற்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் வெளியேறினார். அடுத்து ஜடேஜா, புவனேஸ்வர் இணைந்து அணியை மீட்கும் பணியை செய்தனர். இவர்கள் 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா வெளியேறினார்.

கடைசி ஓவர் வரை பரபரப்பு
ஜாதவ் மீண்டும் உள்ளே வந்தார். அதே சமயம், புவனேஸ்வர் குமார் வெளியேற இந்தியா 7 விக்கெட்கள் இழந்து மீண்டும் பின்னடைவை சந்தித்தது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், குல்தீப், ஜாதவ் இருவரும் மாற்றி மாற்றி ஒற்றை ரன்களாக எடுத்தனர். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ஜாதவ் பின்பக்கம் பந்தை தட்டி விட்டு ஓட.. இந்தியா தன் ஏழாவது ஆசியக் கிண்ண  தொடரை வென்று சாதித்தது. கடைசி வரை போராடிய  பங்களாதேஷால் வெற்றியை பெற முடியவில்லை. 

No comments

Powered by Blogger.