எழுவர் விடுதலை: திரையுலகினர் கோரிக்கை!

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை பெற்றுவரும்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக இயக்குநர் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் இன்று (செப்டம்பர் 9) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
ஏழுபேரின் விடுதலை குறித்த முடிவைத் தமிழக அரசு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் மதியம் தேனாம்பேட்டையில் இயக்குநர் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய பாரதிராஜா ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் மன்னித்து, விடுதலை செய்யலாம் என கூறிய ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இவர்கள் விடுதலைக்காகப் போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார். 27 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து தங்களது இளமையும், வாழ்வையும் இழந்த இவர்கள் 7 பேரையும் விடுவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்குக் கோரிக்கை வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானம் அவர்களின் வழியில் ஆட்சி செய்யும் உங்களது அமைச்சரவையால் சாத்தியமாகும் வரலாற்றுத் தருணம் வாய்த்திருக்கிறது. நம் பிள்ளைகள் சுதந்திரமாகச் சிறகடித்து வெளிவரும் வரம் ஒரு பச்சைத் தமிழரால் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே காலம் இதுவரை காத்திருந்ததாக உணர்கிறோம். உங்களது தலைமையிலான அமைச்சரவை இன்று இயற்றும் தீர்மானம் கோடானகோடி தமிழர்களின் உள்ளங்களில் நிரந்தரமான இடத்தை ஏற்படுத்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“அரசியலைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மாநில அரசுக்கான இறையாண்மை அதிகாரம் எனும் நல்லதிகாரத்தை பயன்படுத்தி உங்களை நம்பிக் காத்திருக்கும் அவர்கள் ஏழு பேரின் வாழ்வில் ஒளியேற்றுங்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் எழுவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ஆளுநருக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.