எழுவரை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை : ஈவிகேஎஸ்!

ராஜிவ் கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும், இதுகுறித்து ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பலாம்” என்றும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பினை வரவேற்றுள்ள தமிழகத்தின் அரசியல் கட்சிகள், ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றன.
இந்த நிலையில் மதுரையில் இன்று (செப்டம்பர் 9) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ராஜீவ் காந்தி கொலை
குறித்து ‘‘மறப்போம், மன்னிப்போம்’’ என்று சோனியா காந்தியும், ஏழுபேரை விடுதலை செய்வதில் காங்கிரஸுக்கு ஆட்சேபம் இல்லை என ராகுல் காந்தியும் கூறியிருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டியதுடன் அவர்களை விடுதலை செய்வது தமிழக அரசு கையில்தான் உள்ளது என்றார். தமிழக அரசு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கூறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் நாளை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். மக்களும் ஆதரவு அளிப்பார்கள் என நினைக்கின்றேன் என்று தெரிவித்தார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது உரிமையாகும். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.. நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வருவேன் என்று கூறுகிறார். ஆனால் எப்போது வருவார் என்று தெரியவில்லை. கட்சி ஆரம்பிக்கத் துடிக்கும் நடிகர்களுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதா என்று தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை.
தற்போது நடிகைகளும் அரசியலுக்கு வர முனைப்பில் இருக்கிறார்கள். நான் கேள்விப்பட்டவரை நடிகை கோவை சரளா கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்று குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.