எட்டு வழிச்சாலை: யோகேந்திர யாதவ் கைது!

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப்
போராடும் விவசாயிகளைச் சந்திக்கச் சென்றபோது, தன்னைத் தமிழக போலீசார் தடுத்துக் கைது செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார் யோகேந்திர யாதவ்.
ஆம் ஆத்மி கட்சியை நிறுவியபோது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் தேர்தல் கணிப்பாளர் யோகேந்திர யாதவ் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். கெஜ்ரிவால் உடனான கருத்து வேறுபாட்டினால், இவர்கள் இருவரும் ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறினர். யோகேந்திர யாதவ் தற்போது ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பை நிறுவி, தொடர்ந்து மக்கள் நலம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள விவசாயிகள். இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில், யோகேந்திர யாதவ் இன்று (செப்டம்பர் 8) தமிழகம் வந்தார். காலை 10 மணியளவில் செங்கம் பகுதியிலிருந்த விவசாயிகளைச் சந்திக்கத் தனது குழுவினருடன் சென்றார்.
அப்போது, தங்களது செல்போன்களைப் பறித்து, போலீஸ் வேனுக்குள் தள்ளியதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்தார் யோகேந்திர யாதவ். அது மட்டுமல்லாமல், தன்னையும் சில விவசாயிகளையும் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்ததாகக் கூறினார்.
“திருவண்ணாமலையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான போலீசாரின் நடவடிக்கைகள் பற்றி அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் செல்போனில் பேசினேன். அவர், அப்படி எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில், விவசாயிகளைச் சந்திக்கும் முன்பாக, நாங்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் போலீசாரால் தடுக்கப்பட்டோம். செல்போன்கள் பறிக்கப்பட்டு, போலீஸ் வேனுக்குள் தள்ளப்பட்டோம்.
நான் வந்ததனால், திருவண்ணாமலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமென்று கைது செய்வதாகத் தெரிவித்தார் மாவட்ட எஸ்பி. விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்களை சந்திக்கப்போவதாகத் தெரிவித்தேன். ஆனால், அதனை அனுமதிக்க முடியாதென்றார் எஸ்பி. காந்திய ஒத்துழையாமை தான் இதற்கான வழி என்று தோன்றுகிறது. நிலம் கையகப்படுத்தலில் போலீசாரின் தலையீடு பற்றிய உண்மையை அறியவே தமிழகம் வந்தேன். தற்போது உண்மையை அறிவதற்கான தேவையில்லாமல் போய்விட்டது. நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தைப் பொறுத்தவரை, இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், காவல் துறையும் நிர்வாகமும் இதனை ஏற்றுக்கொள்ளாமல் விவசாயிகளை ஒப்புக்கொள்ள வற்புறுத்துகிறது. கிராம சபை கூட்ட முடிவுகளை நிராகரிக்கிறது; போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் துன்புறுத்துகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்தார்.
இன்று காலையில் கைது செய்யப்பட்ட யோகேந்திர யாதவும் அவருடன் வந்தவர்களும், மதியம் வரை விடுவிக்கப்படவில்லை. ”கைது செய்யப்பட்டு நான்கு மணி நேரமான பின்பும், ஒரு திருமண மண்டபத்தின் உள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். கைதுக்கான ஆணையோ, வாய்மொழி உத்தரவோ எதுவும் இதுவரை சொல்லப்படவில்லை. என்னைச் சந்திக்க வந்த 9 விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர். என்னைப் பார்க்கக் காத்திருந்த 40 விவசாயிகளும் கூட கைதாகியுள்ளனர். இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சியா? போலீஸ் ஆட்சியா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். இதன்பின்னர், மதியம் 3 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. இது சட்டத்துக்குப் புறம்பானது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் யோகேந்திர யாதவ். அந்த ஆணையில், அப்பகுதியிலுள்ள விவசாயிகளை யோகேந்திர யாதவ் சந்திக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளதற்கு, அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை மீறி, திருவண்ணாமலையிலுள்ள நம்மியேந்தல் எனும் கிராமத்துக்குச் செல்லப் போவதாக அறிவித்துள்ளார். காவல் துறை தனது கடமையைச் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மட்டுமே எட்டு வழிச்சாலைக்கு எதிராகப் போராடி வந்த நிலையில், தற்போது யோகேந்திர யாதவின் வருகையினால் தேசிய அளவிலான முக்கியத்துவம் இப்பிரச்சினைக்குக் கிடைத்துள்ளது
Powered by Blogger.