வேலை உருவாக்கம்: மோடியைச் சாடும் மன்மோகன்

அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது போன்ற
பிம்பத்தை மோடி அரசு உருவாக்கி வருவதாக முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்.
கபில் சிபல் எழுதிய ’Shades of Truth’ (சத்தியத்தின் நிழல்கள்) என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் செம்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மன்மோகன் சிங் பேசுகையில், “மத்திய மோடி அரசின் பணமதிப்பழிப்பு என்னும் நடவடிக்கையால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. 99 சதவிகிதப் பணம் வங்கிகளுக்கே திரும்பி வந்துவிட்டது என்றால் கருப்புப் பணம் அனைத்தும் எங்கே போயிற்று? வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த பில்லியன் டாலர் கணக்கிலான கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதாகக் கூறியது என்னவாயிற்று?” என்று கேள்வியெழுப்பினார்.
வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்துப் பேசிய மன்மோகன் சிங், “மோடி அரசால் வெளியிடப்பட்டு வரும் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களும் அறிக்கைகளும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது போன்று மோடி அரசு சித்தரிக்க முயற்சிக்கிறது. ஜிஎஸ்டி என்ற சீர்திருத்தம் அதை விட மிகப் பெரிய பேரழிவாகும். இதனால் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் துறை உற்பத்தியில் மேக் இன் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா உள்ளிட்ட திட்டங்களும் சொல்லிக்கொள்ளும்படி எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. தொழில் தொடங்குவதை எளிதாக்கும் அம்சங்களால் சிறு நிறுவனங்கள் எதுவும் பயனடையவில்லை” என்று மோடி அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்
Powered by Blogger.