முக்கொம்பில் ராணுவம் ஆய்வு!

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை ராணுவப் பொறியாளர்கள் நேற்று (செப்டம்பர் 4) ஆய்வு செய்தனர்.
கர்நாடகாவில் கடந்த மாதம் பெய்த பெருமழையின் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் மதகுகள், கடந்த 22ஆம் தேதியன்று உடைந்தன. இதனைத் தொடர்ந்து, கொள்ளிடம் மேலணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதை அண்மையில் பார்வையிட்டார் தமிழக அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன். அப்போது, தேவைப்பட்டால் ராணுவ உதவி கோரப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, பெங்களூரு ராணுவப் பயிற்சி முகாமிலிருந்து மேஜர் அரவிந்த் தலைமையில் ஹவில்தார் நாகராஜ், தினேஷ் உட்பட 4 பேர் கொண்ட குழுவினர், முக்கொம்பு மேலணைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அணையில் இறங்கி உடைந்த மதகுகள் பகுதியையும், அங்கு நடைபெறும் சீரமைப்புப் பணிகளையும் இரும்புக் குழாய்கள் தண்ணீரில் பொருத்தப்படுவதையும் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் மேல்பகுதியில் உள்ள பாலத்தில் ஏறி நின்று, தாங்கள் வைத்திருந்த தொலைநோக்கி உட்படப் பல நவீன தொழில்நுட்பக் கருவி மூலம் அணையின் உடைந்த மதகுகள் பகுதியை அளவீடு செய்தனர். சுமார் 2 மணி நேர ஆய்வுக்குப் பிறகு, பொதுப்பணித் துறையினருடன் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றனர்.
இதுதொடர்பாக அமைச்சர் என்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொள்ளிடம் மேலணையில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் 40 சதவிகிதப் பணிகள் மட்டுமே நிறைவடைந்ததாகக் கூறினார். ஆனால், 75 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மாயனூரில் இருந்து வரும் தண்ணீரின் அளவும் தற்போது குறைந்துள்ளது. முன்பைக் காட்டிலும். தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாளில் பணிகள் முழுமையாக முடிவடையும். பணிகள் முடிந்தவுடன் கடைமடைப் பகுதிகள், கிளை வாய்க்கால்களுக்குத் தண்ணீர் திறக்கப்படும். முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டதன் பேரில், ராணுவத்தில் இருந்து பொறியாளர்கள் வந்து சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தனர். மணல் மூட்டைகள், பாறாங்கற்களைக் கொண்டு தண்ணீர் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்துவதுதான் சரியானது என்று கூறினர் ராணுவப் பொறியாளர்கள். இந்த பணிகள் சிறப்பாக நடைபெறுவதாகத் திருப்தி தெரிவித்தனர்" என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.