நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு சரிவு!

சென்ற ஜூலை மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடுகள் 36 சதவிகிதம் வரையில் சரிவைச் சந்தித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் கிளை நிறுவனங்கள் இருப்பதோடு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து அங்கு தொழில் புரிவதும் உண்டு. அப்படிப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களில் இங்கிருந்து முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறாக 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் 2.17 பில்லியன் டாலரை முதலீடு செய்திருந்தன. இந்த முதலீடு கடனாகவும், பங்கு முதலீடாகவும், உத்தரவாதப் பத்திரமாகவும் இருக்கலாம். ஆனால் இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் முதலீடுகள் 1.39 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளன. இது 36 சதவிகிதம் சரிவாகும்.

பங்கு முதலீடாக 608.52 மில்லியன் டாலரும், கடன் வாயிலாக 406.74 மில்லியன் டாலரும், உத்தரவாதப் பத்திரங்கள் வாயிலாக 371.86 மில்லியன் டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்களிலேயே அதிகபட்சமாக, செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 187.39 கோடியை நெதர்லாந்தில் உள்ள தனது கிளை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் நிறுவனம் இத்தாலியில் 66.67 மில்லியன் டாலரையும், இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இங்கிலாந்தில் 54.65 மில்லியன் டாலரையும், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம் அமெரிக்காவில் 50.47 மில்லியன் டாலரையும் முதலீடு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.