ஸ்டாலினும், அழகிரியும் ஒன்றிணைய வேண்டும்: ஆதீனம்!

ஸ்டாலினும், அழகிரியும் ஒன்றிணைய வேண்டும்: என்று மதுரை ஆதீனம் இன்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கிப் பேரணி நடத்தினார் அழகிரி.
இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம் அருணகிரி நாதர், “கட்சி பலப்பட வேண்டுமென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
“நித்தியானந்தா தரப்பிலிருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஆனால் அவர் மீண்டும் ஆதினத்துக்குள் நுழைய முடியாது” என்றும் அருணகிரி நாதர் தெரிவித்துள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பான கேள்விக்கு, குட்கா ஊழல் குறித்து சிபிஐயும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும், ஊழல் அமைச்சர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, சிறையில் உள்ள ஏழு பேரை ஆளுநர் நிச்சயம் விடுதலை செய்ய உத்தரவிடுவார். அதற்கு வரவேற்பைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார் மதுரை ஆதீனம்.
சோபியா கைது செய்யப்பட்டிருக்கக்கூடாது, அவரை அழைத்துப் பேசியிருக்க வேண்டும். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சத்தம் போட்டது இயல்புதான், அவர் அவரின் கடமையைச் செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
இறுதியாக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோயில்களில் நடக்கும் ஊழல்களை ஒழிக்க முடியாது என்றார்.
முன்னதாக, கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஸ்டாலினும், கனிமொழியும் திமுகவைச் சிறப்பாக வழி நடத்துவார்கள் என்று மதுரை ஆதீனம் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

No comments

Powered by Blogger.