மனித உரிமைப்போராளிகள்: தீர்ப்பு ஒத்தி வைப்பு!

கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மனித உரிமைப் போராளிகளின் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் (செப்-20) ஒத்தி வைத்துள்ளது.
கடந்த மாதம் ஆகஸ்ட் மாதம் 28ம்தேதியன்று நாட்டின் மனித உரிமைப் போராளிகளான வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்,பத்திரிகையாளர் நவ்லகா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். வீட்டுக்காவல் நேற்றோடு முடிவடைந்ததையொட்டி அந்த வழக்கின் விசாரணையானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று(செப்-20) நடைபெற்றது.
அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று வரலாற்று நிபுணர் ரொமிலா தாப்பர், பொருளாதார அறிஞர்கள் பிராபாத் பட்நாயக், தேவகி ஜெயின் சமூகவியல் பேராசிரியர் தேஷ்பாண்டே உள்ளிட்ட சில அறிஞர்கள் சிறப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஏஎம். கான்வில்கர் மற்றும் டிஒய்.சந்திரசௌத் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் வழக்கின் விசாரணை தொடர்பான போலீசாரின் புலனாய்வு டைரியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
வழக்கில் மனித உரிமைப் போராளிகளின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்களான பிரசாந்த் பூஷன்,அஸ்வினி குமார் போன்றோர் வழக்கு பொய்யான ஆதாரங்களை வைத்து ஜோடிக்கப்பட்டுள்ளதாக கூறினர். அதனைத்தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு பொய்யான ஆதாரங்களை வைத்து ஜோடிக்கப்பட்டிருந்தால் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடுவதை பரிசீலிக்கலாம் என்று கூறி வழக்கின் தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.