கதாநாயகியாக உணர்ந்த தருணம்: ஷ்ரத்தா!

ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக தான் உணர்ந்த தருணம் குறித்துக் கூறியுள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகிற்கே மையமாகச் செயல்பட்டுவருகிறது ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ஃபில்ம் சிட்டி. ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ரஸ்டம் என்ற கன்னடப் படத்தின் படப்பிடிப்பு தற்போது அங்கு நடைபெற்றுவருகிறது. சிவ்ராஜ் குமார் நடிக்கும் இந்தப் படத்தை ரவி வர்மா இயக்கிவருகிறார்.

ஷ்ரத்தா படப்பிடிப்பு அனுபவம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “ராமோஜி ஃபில்ம் சிட்டியில் வண்ணமயமான அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறுவதால் இப்போதுதான் நான் ஒரு கதாநாயகியாக உணர்கிறேன். கர்நாடகாவிலும் இது போன்ற அரங்குகள் உருவாக வேண்டும்” என்று கூறியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் சிவ்ராஜ் குமாரோடு திரைத்துறை குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஷ்ரத்தா. இவரது காட்சிகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் படமாக்கப்பட உள்ளன.

தமிழில் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானாலும் இவன் தந்திரன் படம் தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக அறிமுகமான படம். கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் அவருக்குப் பரவலான கவனத்தைப் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான ‘ரிச்சி’ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. தற்போது மாதவனுக்கு ஜோடியாக புதிய படம், அருள்நிதி நடிக்கும் படம் என இரு தமிழ்ப் படங்கள் அவரது கைவசம் உள்ளன.

தென்னிந்தியத் திரையுலகில் வலம் வந்த அவர் மிலன் டாக்கிஸ் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாகவுள்ளார். 

No comments

Powered by Blogger.