வடகொரிய ஏவுகணைத் தளங்கள் மூடப்படும்!

வடகொரிய ஏவுகணைத் தளங்கள் நிரந்தரமாக மூடப்படும் என்று வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும்,
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் வடகொரியத் தலைநகர் பியாங்கியாங்கில் நடைபெற்ற கொரிய உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். கிம் ஜாங் உன்னுடனான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், “தாங்சாங்-ரி ஏவுகணைப் பரிசோதனைத் தளத்தை நிரந்தரமாக மூட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.


இதை இருநாட்டு வல்லுநர்கள் முன்னிலையில் செயல்படுத்துவதாகவும் கிம் ஒப்புக்கொண்டுள்ளார்.” என்று தெரிவித்தார். நேற்று நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கிடையே பல்வேறு உடன்படிக்கைகள் எட்டப்பட்டுள்ளதாக இருநாட்டு அரசு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. இதேப்போல அணு ஆயுத விவகாரத்திலும் தன் ’நல்ல பிள்ளை’ நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது வடகொரியா.

இதுதொடர்பாக வடகொரிய செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “அணு ஆயுத ஒழிப்பில் அமெரிக்காவின் செயல்பாடு ரவுடித்தனமாக உள்ளது. எங்களது பொறுமையையும், நல்ல எண்ணத்தையும் அமெரிக்கா தவறாக புரிந்துகொண்டுள்ளது. வற்புறுத்தல் என்ற பெயரில் எங்கள் மீது அதிக அழுத்தம் தருவதை அனுமதிக்க முடியாது. எங்களின் தனித்தன்மையை எந்தநிலையிலும் நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம். சிங்கப்பூரில் நடந்த இரு நாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி நாங்கள் அணு ஆயுத ஒழிப்பை மேற்கொள்வோம்" என்று கூறினார்.

கிம் - ட்ரம்ப் சந்திப்பை அடுத்து, இரு நாடுகளுக்குள் இருந்த பகைமை விலகிவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், வடகொரியாவின் இந்த அறிக்கை, அமெரிக்கப் பகை இன்னும் புகைந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை நினைவுப்படுத்துவது போல இருந்தது. தற்போது ஏவுகணைத் தளங்களை மூடுவது குறித்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வடகொரியா வெளியிடவில்லை. எனவே, இந்த பேச்சுவார்த்தையில் தென்கொரியா உடனான பகைமை அணைக்ப்பட்டதா அல்லது தூண்டிவிடப்பட்டதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.