டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டது டெல்லியை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

ஒருபக்கம், 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். மறுபக்கம் அவர் விவசாயிகள் நலனில் அக்கறை காட்டுவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கென்று போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை, உரங்கள் மற்றும் டீசல் விலை உயர்வு தங்களை நேரடியாக பாதிப்பதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில், மத்திய அரசின் பொருளாதார திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாடு முழுவதும் இருந்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு இன்று(செப்டம்பர் 5) பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த பிரம்மாண்ட பேரணியை இடதுசாரிகள், விவசாய அமைப்புகள், மஸ்தூர், கிசான் சங்கம் ஆகியவை ஒருங்கிணைத்து நடத்தியது. பேரணியில், விவசாயிகள் கடன் தள்ளுபடி, தொழிலாளர் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், குறைந்தபட்சக் கூலியை உயர்த்துதல், நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி அங்கீகாரம் உள்பட 15 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பேரணி குறித்து அகில இந்திய விவசாய சங்க பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா கூறுகையில், "எங்களின் பொது எதிரிக்கு எதிராக முதன்முறையாக இணைந்து குரல் எழுப்பியுள்ளோம். அரசின் திட்டங்கள் கார்ப்பரேட்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது, மக்களுக்கு அல்ல. அரசு திட்டங்களில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

நாடாளுமன்றம் தெரு வழியாக நாடாளுமன்றத்தை நோக்கி சிவப்புக் கொடியுடன் விவசாயிகள் பேரணியாக சென்றது அத்தெரு முழுவதும் நீண்ட சிவப்புக் கொடிகளாக மட்டுமே காட்சி அளித்தன. பேரணி நடைபெற்ற பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

No comments

Powered by Blogger.