விஜயபாஸ்கருக்கு வலுக்கும் நெருக்கடி!

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் உள்பட 40 இடங்களில் இன்று (செப்டம்பர் 5) காலை சிபிஐ சோதனை நடத்த ஆரம்பித்தது. 10 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்த நிலையில்,மாலை 6 மணிக்கு நிறைவுற்றது.

சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் இல்லங்களிலும், சி.பி.ஐ ரெய்டு நடத்தியிருப்பதை வரவேற்கிறேன்.

குட்கா வழக்கில் குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்டவர்களை சமீபத்தில் சிபிஐ விசாரித்துள்ளது. அதில் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் மீதும், சுகாதாரத்துறை அமைச்சர் மீதும் ரெய்டு நடத்தியிருக்கிறது. ஆகவே, குட்கா அதிபரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஆரம்பகட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் இந்த சி.பி.ஐ. ரெய்டு நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

“குட்கா ஊழல் புரிந்ததற்காக ரெய்டு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சரவையிலும், டி.கே. ராஜேந்திரன் புகழ்மிக்க தமிழக காவல்துறையின் தலைவராகவும் இனியும் நீடிப்பது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நேர்மை -நியாயத்திற்கும், காவல்துறை நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய இழுக்காகவும், துடைக்க முடியாத கறையாகவும் அமைந்து விடும்” என்று விமர்சித்துள்ள ஸ்டாலின், இருவரும் தங்கள் பதவிகளை அவர்களாகவே முன்வந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்யவில்லையென்றால் மாண்புமிகு தமிழக ஆளுநர், விஜயபாஸ்கரையும், தமிழ்நாடு டிஜிபி ராஜேந்திரனையும் எவ்வித காலதாமதமுமின்றி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வு தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் அமைச்சர்கள் பதவி காக்கும் அரசு

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குட்கா ஊழலை மூடி மறைக்க சதி நடந்த நிலையில், அந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காண நடத்தப்படும் இச்சோதனைகள் சரியான நடவடிக்கையாகும்.குட்கா ஊழலின் முக்கியக் குற்றவாளி அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதே ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்படுவதால், அவர் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருமான வரி, அமலாக்கப் பிரிவு, சிபிஐ என மூன்று மத்திய அமைப்புகளின் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் மாநில அமைச்சர் என்ற சிறப்புப் பெருமையை விஜயபாஸ்கர் பெற்றிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் அவரை பதவி நீக்காமல் காப்பாற்றி வருவதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மக்கள் நலன் காக்கும் அரசு அல்ல. ஊழல் அமைச்சர்கள் பதவி காக்கும் அரசு என்பது உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் குட்கா ஊழல் வழக்கில் சேர்க்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்களை இன்னும் பதவியிலும், பணியிலும் நீடிக்க அனுமதிப்பதை ஏற்க முடியாது. எனவே, இனியும் தயங்காமல் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தமிழக அரசு பதவி நீக்கம், பணி நீக்கம் செய்ய வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.