“தினகரன் என்னை எதிர்த்து போட்டியிட்டு ஜெயிக்கட்டும்”

தினகரனுக்கு நெஞ்சில் திராணி இருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்டு ஜெயிக்கட்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்காவில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்  கலந்து கொண்டு பேசினார். அப்போது “தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருந்து வருகிறேன்.


ஆனால் டிடிவி.தினகரன் காசு கொடுத்து ஆட்களை திரட்டி புதுக்கோட்டையில் கூட்டம் நடத்தி என்னை விமர்சித்து வருகிறார். 10 ஆண்டு காலமாக பதுங்குகுழியில் பதுங்கி கிடந்த தினகரன் தற்போது ஆட்சி அதிகாரத்திற்கு வர துடிக்கிறார். ஒரு போதும் மக்கள் ஆதரவோடு அவர் அதிகாரத்திற்கு வர முடியாது” என்று அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து “தினகரன் சசிகலாவிற்கு விசுவாசமாக இருந்ததில்லை என்றும் அவர் எம்பி சசிகலா புஷ்பாவிடம் தான் விசுவாசமாக இருந்தார் என்றும் கூறியுள்ளார். ஆர்கே நகர் தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு சசிகலாவின் படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று தினகரன் தன்னிடம் கூறியதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


ஆர்கே நகர் தேர்தலில் தினகரனுக்காக பணியாற்றியதன் விளைவு தான் தனக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும், தற்போது தன்னை விமர்சனம் செய்யும் தினகரனுக்கு நெஞ்சில் திராணி இருந்தால் வருகின்ற சட்டமன்ற பொதுதேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். என்னை எதிர்த்து அவர் முடிந்தால் அவர் ஜெயித்து காட்டட்டும் என்றும் விஜயபாஸ்கர் ஆவேசமாக கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு தர்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்றும், தற்போது திமுக விற்குள் நடந்து வரும் குடும்ப சண்டைகளுக்கு தீர்வு கண்டுவிட்டு நாட்டிற்காக பாடுபட வரட்டும் என்றும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.