தோனி லோக்கல் போட்டிகளில் விளையாடட்டும்' சுனில் கவாஸ்கர்!

இந்திய அணியில் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். நீண்ட காலம் கேப்டனாக இருந்த தோனி 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்தும், கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய கேப்டன் பொறுப்பை அவர் விராட் கோலியிடம் ஒப்படைத்தார்.

விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த போது, களத்திலும் பயிற்சியின் போதும் அவர் இரண்டாவது கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இப்பொழுது விளையாடி வருகிறார். இந்தப் போட்டிகளின் போது இக்கட்டான நேரங்களில் விராட் கோலிக்கு தோனி ஆலோசனை கூறுவார். அதற்கு நல்ல பலன்களும் கிடைக்கும்.

இந்நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இப்போது நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தொடரிலும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மகேந்திர சிங் தோனி உதவி செய்து வருகிறார். ஹாங்காங் உடனான முதல் போட்டியில் நீண்ட நேரம் ஆகியும் விக்கெட் விழாத நிலையில், ரோகித் சர்மாவை பீல்டிங்கில் நிற்க வைத்துவிட்டது கொஞ்ச நேரம் தோனி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்.

ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் கூட தோனி தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவரது பேட்டிங் திறன் குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனையடுத்து இப்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை போட்டியிலும் தோனி பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தோனி அதன் பின் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார் அதில் " தோனி ஆட்டத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஜார்க்கண்ட் மாநில அணியுடனான பயணத்தை அவர் தொடர்கிறார் என்று எனக்குத் தெரியும். அந்த அணியின் மென்டாராகவும் இருந்து அவர்களை தோனி வழிநடத்துகிறார். இருப்பினும், அவர்களுடன் இணைந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது தோனியின் ஆட்டத் திறனை மேம்படுத்துவதுடன், இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் செயலாகவும் இருக்கும். எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் இழந்த ஃபார்மை தோனி மீண்டும் பெறலாம்" என சுனில் கவாஸ்கர் அறிவுறை கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.